வீட்டு வசதி திட்டங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்

தமிழகத்தில் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் (RERA) செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2018-09-01 05:21 GMT
அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய பகுதிகளுக்கான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

மேல் முறையீட்டு தீர்ப்பாயம்

அனைத்து குடியிருப்பு திட்டங்களையும் அந்த ஆணையத்தில் பதிவு செய்வதற்கான அடிப்படை வரையறைகள் அறிவிக்கப்பட்டன. ஆணையத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் தொடர்பாக, மேல் முறையீடு செய்ய தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்யாத நிறுவனங்கள்

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின்படி அதன் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்படாத 200-க்கும் மேற்பட்ட வீட்டு வசதி திட்டங்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அத்தகைய கட்டுமான திட்டங்களில் வீடு வாங்குவது அல்லது முதலீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று பொது மக்களுக்கு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

கட்டுமான திட்ட விவரங்கள்

மேற்கண்ட சட்டத்தின்படி 500-க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் முறையாக விண்ணப்பித்து, பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் அந்த நடைமுறைக்குள் வரவில்லை என்பது அறியப்பட்ட நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் அனைத்து கட்டுமான திட்டங்களின் விவரங்களும் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும், கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலீடு செய்ய வேண்டாம்

அவ்வாறு பதிவு செய்யப்படாத கட்டுமான திட்டங்களின் பட்டியலை ஆணையம் அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்தகைய வீட்டு வசதி குடியிருப்பு திட்டங்களில், வீடுகள், வணிகம் மற்றும் அலுவலக பகுதிகளை பொதுமக்கள் வாங்குவது அல்லது முதலீடு செய்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தகவல்களை அறியலாம்

பதிவு செய்யப்படாத கட்டுமான திட்டங்களை http://www.tnrera.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிட முடியும். மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து குடியிருப்பு திட்டங்களையும் அவற்றின் கட்டுனர் விபரம், திட்ட விபரங்கள், அங்கீகாரம் எண் மற்றும் திட்டத்தின் கார்பெட் ஏரியா எவ்வளவு ஆகிய விபரங்களையும், பதிவு பெற்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் பற்றிய தகவல்களையும் அதில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்