உங்கள் முகவரி
சிமெண்டு கலவைக்கு தண்ணீரின் தரம் அவசியம்

சிமெண்டு கலக்கப்பட்ட கான்கிரீட் மற்றும் சுவர் மேற்பூச்சு கலவைகளில் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு மற்றும் தரம் ஆகியவை மிக முக்கியமானது.
சிமெண்டு கலக்கப்பட்ட கான்கிரீட் மற்றும் சுவர் மேற்பூச்சு கலவைகளில் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு மற்றும் தரம் ஆகியவை மிக முக்கியமானது. சிமெண்டு உடன் சேர்க்கப்படும் தண்ணீர், சிமெண்டுடன் ரசாயன வினை புரிந்து அதை வலுவான ஒட்டும் பசை போன்று மாற்றுகிறது. அந்த பசை போன்ற சிமெண்டு கான்கிரீட்டில் சேர்க்கப்படும் ஜல்லி, மணல் போன்றவற்றை ஒன்றோடு ஒன்று இறுக்கமாக பிணைத்து, பாறை போன்று கெட்டியான பொருளாக மாற்றுகிறது.

அதிக நீர் கூடாது

கான்கிரீட்டில் கலக்கப்படும் நீரின் அளவு அதிகமாகும் பட்சத்தில் கான்கிரீட் வலிமை குறைந்து கொண்டே வரும். மேலும், தண்ணீர் அதிகமாக சேர்க்கப்பட்ட கான்கிரீட் அமைப்புகளில் எளிதாக  விரிசல்கள் ஏற்படுவதோடு, அதன் வாழ்நாள் குறையும் நிலை ஏற்படுகிறது. அதனால், கான்கிரீட் அமைக்கும் பணிகளில் அதன் தண்ணீர் உபயோகம் பற்றி கவனமாக செயல்பட வேண்டும். 

இருவித பயன்பாடு

பொதுவாக, நீரை கான்கிரீட் தயாரிப்பின்போது குறைந்த அளவிலும், கான்கிரீட் அமைத்த பிறகு நீராற்றல் செய்யும் பணிகளில் அதிகப்படியான நீரை பயன்படுத்துவது என்பதுதான் வழக்கமான நடைமுறை ஆகும். சிமெண்டுடன் சேர்த்து கலக்கப்படும் தண்ணீர் ரசாயன மாற்றங்களுக்கு உட்படும் நிலையில் குடிக்கும் நீருக்கு இணையான தரத்துடன் அதை பயன்படுத்துவது அவசியம். 

நீருக்கான சோதனை

கட்டுமான பணியிடத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரில் அமிலம், காரம், உப்பு உள்ளிட்ட கரிமங்கள் கலந்திருக்கும் பட்சத்தில் கான்கிரீட் மற்றும் அதற்குள் உள்ள இரும்பு கம்பிகள் ஆகியவை பாதிக்கப்படலாம். எனவே, தண்ணீரில் அவை அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருப்பதை ஆய்வகத்தில் சோதித்து கண்டறிந்து பயன்படுத்துவது நல்லது.

கூடுதல் கவனம்

கான்கிரீட் தயாரிப்பில் கடல் நீர் அல்லது உப்பின் தன்மை கொண்ட நீரை பயன்படுத்தக்கூடாது. நிலத்தடி நீர் உப்பு கலந்ததாக இருக்கும் பட்சத்தில் நீரின் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதித்து பார்க்க வேண்டும். தரமான நீரை சரியான அளவில் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கான்கிரீட் மற்றும் சிமெண்டு கலவைகள், அதிக வலிமையுடன் நீடித்து உழைக்கும் தன்மையை பெறுகின்றன.