கூட்டாக பெறும் வீட்டு கடனுக்கு வரி சலுகைகள்

கூட்டாக வீட்டு கடன் வாங்கும்போது, இணை கடனாளர், இணை உரிமையாளர் ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதன் அடிப்படையில் வரி சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

Update: 2018-10-26 23:30 GMT
அதாவது, இணை உரிமையாளர் மட்டுமே வரி சலுகை பெறுவார் என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வீட்டின் மீது உரிமை

அதாவது, கணவன்–மனைவி இருவரும் வீட்டு உரிமையாளர்களாக இருக்கும் நிலையில், கணவரது சகோதரர் அல்லது சகோதரி ஆகியோர் கடனில் பங்கெடுத்துக்கொண்டாலும், வீட்டின் உரிமையில் அவர்களுக்கு பங்கு இல்லை என்ற நிலையில் வரி சலுகைகள் கிடைக்காது. வீட்டின் மீது உரிமையுள்ள, பெற்ற கடனை திருப்பி செலுத்துவதில் பங்கு பெறும் இணை கடன்தாரர்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். 

நிதிச்சுமை குறையும்

கூட்டாக பெறும் வீட்டு கடனில் கணவன்–மனைவி இருவருமே கடனை திருப்பி செலுத்தி கடனுக்கான மாதாந்திர தவணை என்ற நிதிச்சுமையை குறைத்துக்கொள்வதுடன், கடனுக்கு கூடுதல் வரி சலுகைகளும் பெறலாம். வீட்டு கடனை திருப்பி செலுத்துவதில் கணவன்–மனைவி இருவரும் பங்கெடுத்துக்கொள்வதால் பிரிவு 80 சி– யின் கீழ் தனித்தனியாக ரூ. 1.5 லட்சத்துக்கு வரிச்சலுகை பெறலாம். 

வட்டிக்கு வரிச்சலுகை

குடியிருப்பதற்காக வாங்கப்பட்ட வீடுகளுக்கு செலுத்தும் வட்டியில் ரூ.2 லட்சம் வரை சலுகை கிடைக்கும். வாடகை வீடாக இருந்து, ஒரு வருட வாடகை வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக இல்லாத பட்சத்தில் செலுத்தும் வட்டிக்கு வரி சலுகை கிடைக்கும். 

 கூட்டு கடன்தாரர்கள் எண்ணிக்கை

கூட்டாக பெறும் வீட்டு கடனுக்கு அதிகபட்சம் 6 பேர்கள் வரை கடன்தாரர்களாக இணையலாம். மேலும், குடும்ப உறவினர்கள் மட்டுமே இணை கடன்தாரர்களாக சேர்த்து கொள்வதுடன், 18 வயதுக்குட்பட்ட மனை ஆண், பெண் ஆகியோர்களையும் இணை கடன்தாரர்களாக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் சேர்த்துக்கொள்வதில்லை.

கடன் பங்குதாரர் கடமை

கணவன் – மனைவி இணைந்து பெற்ற கடனை கணவரால் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மனைவி கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதேபோல் கணவரின் சகோதரர் அல்லது சகோதரி கடனில் பங்குதாரராக இருந்து, வீட்டுக்கு உரிமையாளராக இல்லாத பட்சத்திலும், கடனை அவர்கள் திருப்பி செலுத்தவேண்டும்.

வரிச்சலுகை கணக்கீடு

வீட்டு உரிமையாளர்களாக கணவன் மனைவி இருவரும் ஒரு வருடத்தில் எந்த விகிதத்தில் கடனை திருப்பி செலுத்துகிறார்களோ அந்த விகிதத்தில் வரி சலுகை மற்றும் செலுத்தப்படும் வட்டிக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வரிச்சலுகையும் தரப்படுகிறது.

மேலும் செய்திகள்