சுவர் மேற்பூச்சு விரிசல்களை தவிர்க்கும் தொழில்நுட்பம்
கட்டுமான தொழில்நுட்பம் பல்வேறு விதங்களில் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் பெரும்பாலானகட்டமைப்புகள் ‘ஆர்.சி.சி ஸ்லாப், பீம் மற்றும் காலம்’ போன்ற அடிப்படை அமைப்புகளால் உருவாக்கப்படுகின்றன.;
கட்டுமான தொழில்நுட்பம் பல்வேறு விதங்களில் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் பெரும்பாலானகட்டமைப்புகள் ‘ஆர்.சி.சி ஸ்லாப், பீம் மற்றும் காலம்’ போன்ற அடிப்படை அமைப்புகளால் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் இடைவெளியை செங்கல் அல்லது ‘கான்கிரீட் பிளாக்’ போன்றவற்றின் மூலம் சுவர்களாக, பில்லர் மற்றும் பீம் ஆகியவற்றுடன் இணைத்து கட்டப்படுகின்றன.
விரிசல்களை தடுக்கும் மேற்பூச்சு முறை
பில்லருடன் சுவர் இணையும் பகுதியில் சிமெண்டு கலவை மூலம் மேற்பூச்சு பணியை செய்த சில காலத்தில் சிறு அளவில் விரிசல்கள் மற்றும் தட்பவெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் விரிசல்கள் (Shrinkage Cracks) ஏற்படலாம். அவற்றை தடுப்பதற்கான கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.
பொதுவான முறை
சுவர் மற்றும் தூண்களின் மேற்பரப்பை உளியால் சிறிய அளவில் கொத்திவிட்டு, அவற்றின் மேற்புறம் கோழிவலை (Wire Mesh) வைத்து 1;3 என்ற அளவு கொண்ட சிமெண்டு கலவை மூலம் மேற்பூச்சு செய்யப்படுவது பல பகுதிகளில் பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது.
விரிசல்களுக்கான காரணம்
தொழில்நுட்ப ரீதியாக செங்கல் சுவர்களுக்கு சுருக்கம் மற்றும் விரிவு ஆகிய தன்மைகள் அதிகமாக இருப்பதில்லை. ஆனால், கான்கிரீட் பீம் மற்றும் பில்லர் ஆகியவற்றில் சுருக்கம் மற்றும் விரிவு ஆகிய தன்மைகள் செங்கல் சுவரிலிருந்து மாறுபடுகின்றன. அதன் காரணமாக, சுவர் மேற்பூச்சில் சிறிய அளவில் விரிசல்கள் ஏற்படுகின்றன.
கடைப்பிடிக்க வேண்டியவை
* சிமெண்ட், சுண்ணாம்பு, மணல் ஆகியவற்றை 1;2;6 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்ட கலவை மூலம் சுவர் மேற்பூச்சு பணிகளை பீம் மற்றும் பில்லர்கள் சுவரில் இணையும் பகுதிகளில் செய்யும்போது, அவற்றில் செங்குத்து கோடுகள் (Vertical Groove) விழும்படி தகுந்த உபகரணம் (Plaster Scarifier) மூலம் செய்து கொள்ளலாம்.
* வழக்கமான சிமெண்டு கலவை விகிதமான 1:6 என்ற அளவுக்கு பதிலாக 1:8 என்ற விகிதத்தில் கலவை தயாரித்து, மேற்பூச்சுக்கு இழுவிசை தாங்கும் தன்மை அளிக்கும் ‘சிந்தெடிக் பாலிமர்’ அல்லது ‘ஆப்டிகல் பைபர்’ போன்ற செயற்கை இழைகளை குறிப்பிட்ட அளவுக்கு கலந்து பணிகளை மேற்கொள்ளலாம்.
* மேலும், சந்தையில் கிடைக்கும் ஒயிட் சிமெண்டு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘லெவல் பிளாஸ்ட்’ (Level Plast) கொண்டும் சுவர் மேற்பூச்சு பணிகளை செய்யலாம்.