வீடுகளை அழகு செய்யும் விழாக்கால அலங்கார வகைகள்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேசிய பண்டிகையான தீபாவளி சமயத்தில் பெரும்பாலான வீடுகள் பல்வேறு அலங்காரங்கள் மற்றும் தீபங்களின் அணிவகுப்பில் அழகாக காட்சி அளிப்பது வழக்கம்.

Update: 2018-11-02 23:00 GMT
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேசிய பண்டிகையான தீபாவளி சமயத்தில் பெரும்பாலான வீடுகள் பல்வேறு அலங்காரங்கள் மற்றும் தீபங்களின் அணிவகுப்பில் அழகாக காட்சி அளிப்பது வழக்கம்.

பல்வேறு வழிகள்

விஷேச காலங்களில் வீட்டை அலங்கரிக்க பெயிண்டிங், லேம்ப், பிளவர் வாஸ், செடி, கொடிகள், விளக்குகள், அலங்கார பொருட்கள், பொம்மை, சிலைகள், பர்னிச்சர் ஆகியவற்றை தக்க விதத்தில் பயன்படுத்தி வீடுகளை அழகாக மாற்றலாம்.  

திரைகள், கு‌ஷன், படுக்கை விரிப்புகள், பெட் மற்றும் பாத்ரூம் லினென், டைனிங் டேபிள் செட், புளோர் மேட், ரன்னர் ஆகியவற்றை வெவ்வேறு வண்ணங்களில் பயன்படுத்தியும் வீட்டை அழகுபடுத்தலாம். 

இல்லத்தரசிகள் பலரும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவரும் விதத்தில் எளிமையான வழிகளில் வீட்டை அழகு செய்ய உள் அலங்கார வல்லுனர்கள் வழிகாட்டி உள்ளனர். அவற்றின் தொகுப்பை இங்கே காணலாம். 

அழகிய கோலங்கள்

வீட்டுக்கு வெளிப்புறம் மற்றும் ஹாலின் நடுவில் ரங்கோலி கோலத்தை அழகாக வரைந்து, அதன் மத்தியில் பூக்களை வைத்து அழகுபடுத்தலாம். மேலும், மலர்கள், இலைகள் மற்றும் விளக்குகள் ஆகியவற்றை வைத்தும் அலங்கரிக்கலாம். வீட்டின் தலைவாசல் அல்லது வரவேற்பறை பகுதியில் உள்ள பெரிய அளவு கொண்ட கோலம் வரைந்தால் கண்களை கவருவதாக இருக்கும்.  

தோரணங்கள்  

தீபாவளி என்பது மகாலட்சுமி மற்றும் விநாயகர் ஆகிய தெய்வங்களையும், குபேரனையும் வரவேற்கும் பண்டிகை என்ற நிலையில் நுழைவாசல் மற்றும் பூஜை அறை ஆகியவற்றை வண்ணமிகு தீபாவளி தோரணங்கள் மூலம் அழகாக மாற்றலாம்.

மேலும், வீடுகளின் பல்வேறு பகுதிகளில் சிறிய கிண்ணங்களில் நறுமணம் வீசும் பொருட்களை வைப்பதன் மூலம் மனம் கவரும் சூழல் அமையும். அத்தர், ஜவ்வாது மற்றும் சந்தனம் ஆகிய பொருட்களை ஆங்காங்கே தடவி வைத்தும் எளிய பட்ஜெட்டில் வீட்டை மணம் வீசுமாறு செய்யலாம்.

கலர் பேப்பர் வகைகள்

பண்டிகைகளுக்கும் ஏற்ற விதவிதமான கலர் பேப்பர்களை ஒட்டுவதன் மூலம் வெளிப்புற சுவர்கள் உள் அறைகள் மற்றும் இதர பகுதிகளை அலங்கரிக்கலாம். பளபளப்பான தோற்றத்துடன் விதவிதமான டிசைன்கள் கொண்ட பேப்பர் வகைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.  

பூந்தொட்டிகள் மற்றும் சிலைகள்

ஹாலின் மத்தியில் ஒரு டேபிளை வைத்து, அதன் மேல் அழகிய தோற்றம் கொண்ட தெய்வ சிலைகளை வைத்து, அதனை சுற்றிலும் ஒரிஜினல் அல்லது மின்சார தீபங்களை வரிசையாக வைக்கலாம். 

சிலைக்கு பதிலாக அகலமான மண் அல்லது பித்தளை பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீரை நிரப்பி, பல வண்ண மலர்களை போட்டு வைத்து, அவற்றை சுற்றிலும் தீபங்களை ஏற்றி வைத்தும் அந்த இடத்தை அழகாக மாற்றலாம்.

மேலும் செய்திகள்