மன அமைதி தரும் இடமாக மேல் மாடியை மாற்றலாம்

தனி வீடு அல்லது அடுக்குமாடி ஆகியவற்றின் மேல் மாடியை பலரும் துணிகள் மற்றும் வடகம் ஆகியவற்றை உலர்த்தும் இடமாக மட்டும் பயன்படுத்தி வருவதாக உள் கட்டமைப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Update: 2018-12-28 22:30 GMT
னி வீடு அல்லது அடுக்குமாடி ஆகியவற்றின் மேல் மாடியை பலரும் துணிகள் மற்றும் வடகம் ஆகியவற்றை உலர்த்தும் இடமாக மட்டும் பயன்படுத்தி வருவதாக உள் கட்டமைப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அடுக்கு மாடியாக இருந்தாலும், தனி வீடாக இருந்தாலும் மேல் மாடிகளை பசுமையாகவும், சுத்தமாகவும் கீழ்க்கண்ட குறிப்புகளின்படி பராமரித்து வந்தால் அவற்றின் அழகை ரசிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாத பராமரிப்பு

பிளாட் வீடுகளில் குடியிருக்கும் அனைவருக்கும் மேல் மாடி பொது உபயோகத்துக்கானது என்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து பராமரிக்கும்படி ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் அனைத்து வீட்டினரும் மேல்மாடியை அழகாக பராமரித்து வரலாம்.

மனதுக்கு அமைதி

வில்லா என்ற தனி வீட்டில் வேண்டாத பொருட்களை போட்டு வைக்கும் இடமாகப் மொட்டை மாடி பல இடங்களில் உள்ளது. அதனால், கரையான் உள்ளிட்ட இதர பூச்சிகளால் நாளடைவில் மேல் மாடி பாதிப்படையக்கூடும். இந்த சிக்கலை தவிர்ப்பதற்கு மேல் மாடியில் ‘டெரஸ் கார்டன்’
(Terrace Garden)
அமைத்து, சிறிய தொட்டிகளில் பூச்செடிகள், காய்கறி செடிகள் ஆகியவற்றை வளர்த்து பராமரிக்கலாம். தக்க இருக்கைகளை அமைத்து மாலை நேரங்களில் அங்கே ஓய்வாக அமர்வது மனதுக்கு ‘ரிலாக்ஸாக’ இருக்கும் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். 

குழந்தைகள் விளையாடும் இடம்

குழந்தைகள் உள்ள வீடுகளில் மேல் மாடியை தக்க பாதுகாப்பு அம்சங்களுடன் அவர்களுக்கான குட்டி விளையாட்டு மைதானமாக மாற்றலாம். விசே‌ஷ நாட்களில் மாடி கைப்பிடி சுவர் ஓரங்களில் செடிகள் வைத்து நடுவில் ‘லான் கார்ப்பெட்’ விரித்து, நடுவில் குழந்தைகள் கூடி விளையாட இடம் தரலாம். சுவர்கள், தரைப்பரப்பு ஆகியவற்றை அழகான வண்ணம் பூசி குழந்தைகள் விரும்பும் இடமாக அமைக்கலாம். குறிப்பாக, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடும்போது சுற்றுச்சுவர் அமைப்பில் தக்க இரும்பு நெட் வகைகளை உயரமாக அமைத்துக்கொள்வது மிக முக்கியம். 

பருவநிலை பாதிப்புகள்

மாலை நேரத்தில் படிக்கும் இடமாக மேல் மாடியை பயன்படுத்தலாம். சுற்றிலும் பல வண்ண பூந்தொட்டிகள் வைத்திருப்பது அழகாக இருக்கும். மேலும், காலநிலை மாற்றம் காரணமாக மேல் மாடி அதிகமாக பாதிக்கப்படும் என்பதால் வெயில் காலத்தில் சிமெண்டு பூச்சு காய்ந்து விரிசல்கள் உருவாகலாம். அதை தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்து பராமரித்து வரவேண்டும்.

தண்ணீர் கவனம்

வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேல் மாடிகளில் தெளிப்பதற்கு துணி துவைத்த சோப்பு தண்ணீரை பலரும் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு செய்யும்போது கட்டிடத்தின் விரிசல் அதிகமாகக்கூடும். மேலும், மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால் சுவர் ஓரங்களில் பாசி படர்ந்து, கால் வைக்கும்போது வழுக்கி விட ஏதுவாகும். அதனால் நீர் தேங்காமல் எளிதாக வடிந்து செல்லும்படி தளம் தக்க வாட்டத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

மேலும் செய்திகள்