கட்டுமான துறையில் நவீன தொழில் நுட்பங்கள்

ஒவ்வொரு புது வருட தொடக்கத்திலும் கட்டுமான துறையில் முக்கியமான பங்காற்றக்கூடிய நவீன மாற்றங்கள் பற்றி நிபுணர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

Update: 2019-01-12 10:11 GMT
அந்த வகையில் 2019-ம் ஆண்டில் கட்டுமான உலகில் பிரதான இடத்தை பிடிக்க உள்ள சில தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

கட்டிட கலையில் நவீன முறைகள்

கட்டிடக்கலை துறையில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT), உள்ளார்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் இயக்கம் மற்றும் மேலாண்மை நடவடிக்கை ஆகிய நிலைகளில் தானியங்கி கட்டுமான தொழில்நுட்ப முறைகள் உலகளாவிய அளவில் பரவலான பயன்பாட்டில் இருந்து வருவது அறியப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டு பிரிவுகள் ஆகியவற்றில் கட்டிடக்கலை நிபுணர்களின் அவசியம் அதிகரித்து வருகிறது.

‘அக்ரிடெக்சர்’ தொழில்நுட்பம்

ஆர்க்கிடெக்சர் மற்றும் அக்ரிகல்சர் ஆகிய இரு வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்த புதிய அணுகுமுறையாக அக்ரிடெக்சர் (Agritecture) உள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுடன் மரம், செடி மற்றும் கொடிகள் வளர்ப்பு முறைகளுக்கு ஒருங்கிணைந்த திட்டமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் பசுமை கட்டமைப்புகள் அமைப்பதற்கு ஏற்ற சாத்தியக்கூறாகவும் இந்த முறை நிபுணர்களால் கவனிக்கப்படுகிறது. குறைந்த இடப்பரப்புகளில் தோட்டம் மற்றும் உணவுப்பயிர் சாகுபடிக்கு இந்த முறை வழிகாட்டுகிறது. செங்குத்து தோட்டம் (Vertical Garden) மற்றும் ‘வேஸ்ட் வாட்டர் மேனேஜ்மெண்டு’ ஆகியவற்றில் இந்த முறையை பயன்படுத்தி பல நன்மைகளை பெற இயலும்.

‘ட்ரோன்ஸ்’

மேற்குறிப்பிட்ட நவீன தொழில்நுட்ப முறைகளில் ‘ட்ரோன்ஸ்’ என்ற ஆளில்லாமல் பறக்கும் குட்டி விமானங்கள் கட்டுமான திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளை பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு மேலாண்மை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக கட்டுமானப்பணிகள் குறித்த தகவல்களை படங்களாக சேமித்து வைக்கின்றன.

அதன் அடிப்படையில் கட்டுமான பணிகளை பல்வேறு கட்டங்களாக பிரித்து அறிந்து கொண்டு பணிகளை செய்து முடிக்க ‘ட்ரோன்கள்’ தக்க விதத்தில் உதவுகின்றன. குறிப்பாக, கட்டுமானப்பணிகள் முடிவடைந்த பின்னர் கட்டிட மதிப்பீட்டை ‘ட்ரோன்கள்’ மற்றும் ‘சென்சார்கள்’ மூலம் கணக்கிட முடியும்.

செயற்கை நுண்ணறிவு

வளர்ந்த நாடுகளில் எந்திர ரீதியான செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் (Artificial Intelligence -AI) கட்டிடக்கலை பணிகளின் செயலாக்கம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்வதில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. நகர்ப்புற உள் கட்டமைப்புகளுக்கான மாதிரி திட்டங்கள் மற்றும் அவற்றின் முப்பரிமாண தோற்றம் ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் தக்க துணையாக அமைகிறது.

பல்வேறு வடிவமைப்புகளுக்கான கச்சிதமான முடிவுகளை விரைவாகவும், முன்னதாகவும் மேற்கொள்ள மெய்நிகர் உண்மை (Virtual Reality) மற்றும் புனைவு உண்மை (Augmented Reality) ஆகிய கூடுதல் அணுகுமுறைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

எதிர்கால வளர்ச்சி

வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை துறை எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம் என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் அதற்கான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலம் இந்த தலைமுறை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் தொழில் முறை வல்லுனர்கள் ஆகியோர் இன்றைய நவீன தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த இயலும். மேற்கண்ட தொழில்நுட்பங்கள் இந்த புத்தாண்டு முதல் வரும் காலங்களில் கட்டுமான பொறியியல் மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் முக்கியமான இடத்தை பெற இருப்பதை வல்லுனர்கள் பலரும் சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்