கான்கிரீட் ‘பிளாக்’ சுவர் அமைப்புக்கு நவீன கலவை

கட்டிடங்களுக்கான சுவர் அமைப்பில் வழக்கமான செங்கல் பயன்பாடு தற்போது குறைந்து கொண்டு வருகிறது.

Update: 2019-01-18 21:45 GMT
ட்டிடங்களுக்கான சுவர் அமைப்பில் வழக்கமான செங்கல் பயன்பாடு தற்போது குறைந்து கொண்டு வருகிறது. செங்கலின் இடத்தை  AAC  (Autoclaved Aerated Concrete) மற்றும் CLC (Cellular Light Weight Concrete) ஆகிய ‘பிளாக்’ வகைகள் பிடித்துள்ளன. செங்கல் தயாரிப்பில் சூழலியல் விழிப்புணர்வு மற்றும் அதற்கான மண், பணியாளர்கள், விலை போன்ற சிக்கல்களால் அதற்கு மாற்று முறைகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கட்டுனர்கள் கான்கிரீட் பிளாக்குகள் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட இரு வகை பிளாக்குகளையும் பயன்படுத்த தொடங்கினர். 

சிமெண்டு கலவை

குறிப்பாக, பெருநகரங்களில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான கட்டுமானங்களில் ஏ.ஏ.சி அல்லது சி.எல்.சி வகை பிளாக்குகள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. (புரோத்தம் பிரிக்ஸ் வகைகள் தனியிடத்தை பிடித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது) மேலும், இவ்வகை கற்கள் செங்கலைவிட தண்ணீரை குறைவாக உறிஞ்சுவது மற்றும் பணிகள் வேகமாக முடிக்கப்படுவது ஆகிய அம்சங்கள் காரணமாக அவற்றின் பயன்பாடு அதிகமாகி உள்ளது. 

செங்கல் சுவர்கள் கட்டமைப்பில் செங்கலை ஒன்றோடு ஒன்றாக இணைக்கவும், அமைக்கப்பட்ட சுவருக்கான மேற்பூச்சு பணிகளை மேற்கொள்ளவும் அடர்த்தியான மணல்–சிமெண்டு கலவை பயன்படுத்தப்படும். அதன் பின்னர் செங்கல் சுவரை குறிப்பிட்ட காலம் வரையில் தண்ணீர் கொண்டு நீராற்றல் செய்வது முக்கியம்.

விஷேச கலவை

செங்கலின் தன்மை மற்றும் வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் மணல்–சிமெண்டு கலவை பொருத்தமாக இருக்கும். ஆனால், கான்கிரீட் அடிப்படையிலான பிளாக்குகள் வடிவம் மற்றும் தோற்றம் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அதற்கு வழக்கமான கலவையை விடவும் மாற்று முறை அவசியமானதாக உணரப்பட்டது. அதன் அடிப்படையில் சிமெண்டு கலவையை விடவும் 2 மடங்குக்கும் அதிகமாக அடர்த்தி குறைந்த பிரத்யேக ‘லைட் வெயிட் மார்ட்டர்’ என்ற ரெடிமேடு கலவையை தற்போது தனியார் நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.

விரிசல்கள் உருவாகாது

மணல் இன்றி சிமெண்டு அடிப்படையிலான தயாரிப்பாக சந்தையில் கிடைக்கும் அந்த மார்ட்டரை பயன்படுத்தி சுவர்கள் மற்றும் மேற்பூச்சு பணிகளை எளிதாக செய்து முடிக்கலாம். மேலும், அவற்றுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படாது என்பதுடன் கலவை மேற்பூச்சில் நுண்ணிய விரிசல்கள் உருவாவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த நவீன மார்ட்டர் பயன்பாட்டில் கீழ்க்கண்ட அம்சங்களை கவனிக்க வேண்டும்.

* கான்கிரீட், ஏ.ஏ.சி அல்லது சி.எல்.சி ஆகிய பிளாக்குகள் முற்றிலும் உலர்ந்த நிலையில் சுத்தமாக இருப்பது அவசியம். இந்த கலவை மூலம் மேற்பூச்சு பணிகளை செய்யும்போது கிரீஸ், ஆயில் மற்றும் அழுக்கு இல்லாத சுத்தமான பரப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* இவ்வகை பிரத்தியேக மார்ட்டர் 1 கிலோ என்ற அளவுக்கு தண்ணீர் அரை லிட்டர் போதுமானது என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு தண்ணீர் சேர்த்து கச்சிதமான கலவையாக மாறும் வரையில் மெதுவாக கலக்க வேண்டும்.

* அவ்வாறு தயாரான கலவையை மேற்கொண்டு தண்ணீர் சேர்க்காமல் அப்படியே 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

*  அதன் பின்னர் பிளாக்குகளுக்கு இடையில் 3 முதல் 4 எம்.எம் அளவு கொண்ட கலவையை அமைத்து சுவர்களை கட்டமைக்கலாம்.

* கலவை சுமாராக 10 நிமிட காலம் உலராமல் இருக்கும் என்ற நிலையில் சுவர் அமைப்பு பணிகளில் கான்கிரீட் கற்களை நேர்கோட்டில் அடுக்குவது உள்ளிட்ட சீரமைப்பு வேலைகளை செய்து கொள்லலாம். 

* இவ்வகை மார்ட்டர் மூலம் அமைக்கப்பட்ட சுவர்களுக்கு நீராற்றல் செய்ய வேண்டியதில்லை என்றும் அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்