உலகின் விலை மதிப்பு மிக்க கட்டுமானங்கள்

உலக நாடுகளான துபாய், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிகப்பெரிய முதலீட்டில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் உயரமாகவும் உள்ள அத்தகைய கட்டமைப்புகள் பற்றிய சுவாரசியமான செய்திகள் பற்றி இங்கே காணலாம்.

Update: 2019-01-25 23:15 GMT


இஸ்தானா நுருல்  இமான் பேலஸ், புரூனே 

1984 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் டாலர் பொருட்செலவில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை இதுவாகும். புரூனே நாட்டின் சுல்தான் தங்குவதற்கான அரண்மனையாக புரூனே நதிக்கரையில் கட்டப்பட்டு, இன்றும் அரசருக்கான குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேலஸில் 5 ஆயிரம் விருந்தினர்கள் அமர்ந்து விருந்துண்ணும் வகையில் பிரம்மாண்டமான உணவு உண்ணும் ஹால் உள்ளது. இந்த பேலஸில் மொத்தம் 1,788 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட அரச பாரம்பரிய நடவடிக்கைகளின் அடிப்படையில் உலகின் பிரம்மாண்டமான அரண்மனையாக குறிப்பிடப்படுகிறது. இஸ்தானா நூருல் இமான் என்பதற்கு நம்பிக்கையின் ஒளி கொண்ட அரண்மனை என்பது பொருளாகும். இஸ்லாமிய மற்றும் மலாய் பாரம்பரியங்களின்படி இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. 1788 அறைகள் மற்றும் 257 பாத்ரூம்கள் கொண்டதாகவும், உள்ளே அமைக்கப்பட்டுள்ள தொழுகைக்கான இடத்தில் 1500 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்த இயலும். மேலும், 18 லிப்டுகள் மற்றும் 44 மாடிப்படி அமைப்புகளுடன்  2 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் டவர், ஷாங்காய் 

128 மாடிகள் கொண்டதாகவும் 2,073 அடி அதாவது 632 மீட்டர் உயரமும் உள்ள ஷாங்காய் சென்டர் பில்டிங் என்ர இந்த கட்டமைப்பும் உலகப்புகழ் பெற்றதாகும். கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர் பொருட்செலவில் அமைக்கப்பட்ட இந்த ஷாங்காயின் சுழல் டவரில் உலக அளவில் வேகமாக இயங்கக்கூடிய லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மணிக்கு சுமாராக 74 கிலோமீட்டர் வேகத்தில் அந்த லிப்ட் அமைப்புகள் இயங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது. 

ஷாங்காய் நகர நிர்வாகத்துக்கு சொந்தமான இந்த கட்டமைப்பு 3 வெவ்வேறு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக பகுதி, வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற மூன்று நிலைகளில் இந்தகட்டமைப்பு செயல்படுகிறது. கடந்த 2008– ஆண்டு கட்டுமான பணிகளை தொடங்கி 2016–ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இதன் 118–வது மாடியில் உள்ள கண்காணிப்பு மற்றும் பார்வையிடும் வசதிகள் கொண்ட தளம் பொதுமக்களுக்காக சிறிது காலம் கழித்து திறந்து விடப்பட்டது. 

பிரின்சஸ் டவர், துபாய்

துபாய் நகரின் பிரபலமான புர்ஜ் கலிபாவிற்கு அடுத்தபடியாக சொல்லப்படும் இந்த டவர் உலகின் உயரமான குடியிருப்பு கட்டிடமாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 2.4 பில்லியன் டாலர் மதிப்பை கொண்டதாக துபாயில் அதிக பொருட்செலவில் அமைந்த இக்கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் என்று அறியப்படுகிறது. 107 மாடிகள் கொண்டதாகவும், 414 மீட்டர் உயரத்துடனும் உள்ள இந்த குடியிருப்பு பகுதி கின்னஸ் ரெக்கார்டு மூலம் உலகப்புகழ் பெற்றதாகும். 

இந்த கட்டமைப்பில் 1,2 மற்றும் 3 பெட்ரூம்கள் கொண்ட 763 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகளுக்காக 957 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விரைவாக இயங்கக்கூடிய லிப்ட் வசதிகள், குழந்தைகள் பார்க்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்