ஆவணங்களுக்கான முத்திரை தாள் கட்டணம்

குறிப்பிட்ட வீடு அல்லது மனைக்கான உரிமையை சட்டப்பூர்வ ஆதாரமாக மாற்ற ஒருவரது பெயருக்கு அந்த சொத்து ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் மூலம் வீட்டு வரி ரசீது, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதிவேடுகளில் சம்பந்தப்பட்டவர் பெயருக்கு மாற்றி ஆவணப்படுத்திக்கொள்ள இயலும்.

Update: 2019-01-25 23:45 GMT


* முத்திரைத்தாள் ஜுடிசியல் (Judicial) மற்றும் நான்–ஜுடிசியல் (Non-Judicial) என்று இரண்டு வகையாக உள்ளது. ஜுடிசியல் என்பது நீதித்துறைக்கு உள்ளே சொத்து வழக்குகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுபவை. நான்–ஜுடிசியல் என்பது பத்திரப்பதிவு அலுவலகம், இன்சூரன்ஸ் அக்ரிமென்டு போன்ற நிலைகளில் பயன்படுகின்றன. 

* முத்திரைத்தாள் கட்டணம் என்பது ஒரு சொத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றம் செய்வதற்கு அரசால், இந்திய முத்திரைத்தாள் சட்டம் 1899–ன் பிரிவு 3–ன் கீழ் வசூலிக்கப்படுவதாகும். 

* சொத்தின் சந்தை மதிப்பு, சொத்து அமைந்துள்ள பகுதி, புதிய அல்லது பழைய கட்டுமானம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணம் பத்திர பதிவின்போது பெறப்படுகிறது. முத்திரை தாள் கட்டணத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது என்பதுடன் அதன் விவரங்களை சரிபார்த்த பின்னரே சொத்து பதிவு செய்யப்படும். 

* பொதுவாக, சொத்தை வாங்குபவர் அதற்குரிய கட்டணத்தை செலுத்துவது வழக்கம். சொத்து பரிமாற்றத்தின்போது வாங்குபவரும், விற்பவரும் சரிசமமாக கட்டணத்தை பகிர்ந்துகொள்வார்கள்.

* கட்டணத்தை முழுவதும் செலுத்த தவறும் நிலையில் பாக்கி உள்ள தொகையின் மீது அபராத தொகையாக மாதம் ஒன்றிற்கு 2 சதவிகிதம் என்று அதிகபட்சம் 200 சதவிகிதம் வரை விதிக்கப்படலாம். 

* முத்திரைத்தாள்களை சொத்து வாங்குபவர் அல்லது விற்பவர் ஆகியோர் பெயரில் மட்டும் வாங்கவேண்டும். முறையாக கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் வாங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்கு அவை செல்லத்தக்கது. அதாவது, அவற்றில் எதுவும் எழுதாமலும், பத்திரப்பதிவு நடக்காமலும் இருக்கும் பட்சத்தில் ஆறு மாதங்கள் வரை மதிப்பை இழப்பதில்லை.

* சொத்து சம்பந்தமான முக்கியமான தகவல்கள் தெளிவாக இல்லாவிட்டால் பத்திரம் திருப்பி அனுப்பப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சொத்து சம்பந்தமான தகவல்கள் அதாவது வீடு என்றால் அது அமைந்துள்ள பகுதி, கட்டப்பட்ட ஆண்டு, அடுக்குகள் எண்ணிக்கை போன்ற தகவல்களை சரியாக குறிப்பிடுவது முக்கியம். 

* உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வீட்டு வசதி வங்கிகள் மூலம் விற்கப்படும் சொத்துக்கள் ஆகியவற்றிற்கு முத்திரைத்தாள் கட்டணம் இல்லை. 

* சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சொத்துக்களை மாற்றும்போது அவற்றின் சந்தை மதிப்பிற்கேற்ற கட்டணத்தை செலுத்த வேண்டும். 

* பத்திரத்தில் காட்டப்படும் சொத்தின் மதிப்பு அல்லது அதற்கான அரசின் சந்தை வழிகாட்டி மதிப்பு ஆகிய இரண்டில் எது அதிகமோ அதனை செலுத்தவேண்டும். ஒருவேளை முத்திரைத்தாள் மதிப்பு சந்தை மதிப்பு விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் பட்சத்தில் அதனை குறைக்க முத்திரைத்தாள் சட்டம் 47 (A)–ன் கீழ் விண்ணப்பிக்கலாம்.

* கிரைய பத்திரத்தை முழுவதும் வெள்ளை தாளில் எழுதி, முத்திரை தீர்வை மதிப்பை பணமாகவும் செலுத்தலாம். 

மேலும் செய்திகள்