மின்சார உபகரணங்கள் பயன்பாட்டில் குழந்தைகளுக்கான பாதுகாப்பபு நடவடிக்கைகள்

இன்றைய சூழலில் அனைத்து வீடுகளிலும் பல வகையான மின்சார உபகரணங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

Update: 2019-01-26 00:45 GMT
 அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத அங்கமாக மாறிவிட்ட மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்தும்போது சகலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக, வீட்டிலுள்ள குட்டி பசங்கள் மின்சாரம் மூலம் இயங்கும் சாதனங்களை இயக்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களது பாதுகாப்பில் பெரியவர்கள்தான் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். 

மின்சாதனங்கள் பயன்பாட்டில் குட்டி பசங்கள் பொதுவாக மேற்கொள்ளும் கவனமற்ற வி‌ஷயங்கள் பற்றி மின்னியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களது கருத்துக்களில் உள்ள முக்கியமான அம்சங்களை இங்கே காணலாம்.

* ‘பிளக் பாயிண்டுகள்’ அருகில் விரல்களை நீட்டுவது, விளையாட்டு பொருட்களை கொண்டு செல்வது அல்லது இதர பொருட்களை அதன் அருகில் இருப்பதுபோல் வைப்பது போன்றவற்றால் மின் அதிர்ச்சி ஏற்படலாம்.

* குளியலறையில் உள்ள ‘‌ஷவர்’ அல்லது ‘பாத் டப்’ அருகில் ‘ஹேர் டிரையர்’ மற்றும் செல்போன் உள்ளிட்ட மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். 

*‘பிளக் பாயிண்டில்’ மின் இணைப்புக்காக செருகப்பட்டுள்ள 3–பின் அல்லது 2–பின் இணைப்பை அதன் ஒயர்களை பிடித்து இழுத்து கழற்றுவது கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் திடீர் மின் அதிர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

* டீ, காபி உள்ளிட்ட பானங்களை லேப்–டாப் அல்லது வீடியோ கேம்ஸ் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மேற்புறத்தில் வைக்கக்கூடாது. அவை எதிர்பாராமல் கீழே கொட்டிவிடும் நிலையில் பல சிக்கல்கள் ஏற்படலாம்.

* மின் கம்பங்களுக்கு அருகில் உள்ள மரங்களில் ஏறி விளையாட முயற்சிப்பது தவறானதாகும். மின்சாரம் பாய்ந்து கொண்டுள்ள கம்பிகள் எப்போதும் அபாயமானவை என்ற நிலையில் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் கம்பங்களின் கீழே விளையாடுவதையும் தவிர்க்கும்படி செய்யவேண்டும்.

* மின்சாரம் அபாயம் என்ற முக்கோண எச்சரிக்கை குறியீடு உள்ள பகுதிகளின் அருகில்கூட செல்லாமல் இருப்பதே பாதுகாப்பானது. அத்தகைய இடங்களில் எவ்வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிய இயலாத நிலையில் குட்டி பசங்களை அதற்கு அருகில் செல்லவும் அனுமதிக்கக்கூடாது. 

மேலும் செய்திகள்