பழைய வீட்டை விற்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள்

இன்றைய சூழலில் நகரங்களின் முக்கிய பகுதிகளில் வீடு–மனை வாங்குவது என்பது நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது.

Update: 2019-01-26 01:00 GMT
பல்வேறு பொருளாதார நிலைகளின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்போ அல்லது மனையோ வாங்க பல ஆண்டுகளாக திட்டமிடுபவர்களும் உண்டு. புது வீடுகளுக்கான விலையில் சந்தை நிலவரம் காரணமாக அவர்களில் பலரும் நகரின் பிரதான பகுதிகளில் உள்ள பழைய வீடுகளை வாங்கும் முடிவுக்கு வந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள் முக்கியம்

தற்போது ஒருவர் குடியிருக்கும் வீட்டை வெவ்வேறு காரணங்களுக்காக விற்பனை செய்ய முடிவு செய்யும்போது அது சுலபமாக முடிந்துவிடும் என்றுதான் நினைப்பார். ஆனால், பழைய வீடுகளை விற்பனை செய்ய சரியான சந்தை நிலவரப்படி தொகை நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றை எளிதாக விற்பனை செய்துவிட முடியாது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் சொல்வது கவனிக்கத்தக்கது. பழைய வீடுகளை விற்க விரும்புபவர்கள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய வி‌ஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

வெளிப்புற தோற்றம்

எந்த ஒரு வீட்டுக்கும் வெளிப்புற தோற்றம் கண்ணை கவரும் விதத்தில் இருக்க வேண்டும் பொதுவான விதிமுறை. அதனால், சற்றே மங்கலாக தோற்றமளிக்கும் வீடுகள் குறைத்து மதிப்பிடப்படும். அதனால், தகுந்த எக்ஸ்டீரியர் பெயிண்டு மூலம் சற்று குறைவான பட்ஜெட்டில் வெளிப்புற தோற்றத்தை அழகாக மாற்றுவது அவசியம். லேசான விரிசல்கள் இருந்தால் அவற்றை சீரமைப்பது அவசியம்.

பர்னிச்சர் பராமரிப்புகள்

விற்க முடிவு செய்யப்பட்ட வீட்டிலுள்ள பர்னிச்சர் வகைகளை பலரும் சரியாக பராமரிக்காமல் விட்டு விடுவார்கள். வீடு என்னதான் அழகாக இருந்தாலும் அங்கு உள்ள பர்னிச்சர் வகைகள் குறைபாடுள்ளதாகவோ, பழுதடைந்த நிலையிலோ இருப்பதை வீடு வாங்க வருபவர்கள் விரும்ப மாட்டார்கள். அதுபோன்ற எண்ணம் காரணமாக விலையை குறைவாக மதிப்பிடவும் வாய்ப்பு இருக்கிறது. 

வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றில் நிலுவைகள் இல்லாமலும், வீடு சம்பந்தமான தாய் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியான நிலையில் இருப்பதை பலரும் நேர்மையான அணுகுமுறையாக கருதுகிறார்கள். அவற்றை சரியான முறையில் கைகளில் வைத்திருப்பது பல நன்மைகளை அளிக்கும். 

சின்னச் சின்ன பழுது நீக்கும் வேலைகளை சரி செய்வது, கதவில் உள்ள கைப்பிடி மற்றும் தாழ்ப்பாள் ஆகியவற்றை சரி செய்வது, எலக்ட்ரிக் பொருட்கள், தண்ணீர் குழாய்கள், கழிவறை ஆகியவை பழுதுகள் இல்லாது சரியாகவும், கச்சிதமாகவும் இருப்பது அவசியம்.

இணைய தளத்தில் விளம்பரம்

தற்போதைய தொழில்நுட்ப அணுகுமுறைகளின் அடிப்படையில் வீட்டை அழகான முறையில் படங்களாகவும், வீடியோவாகவும் தக்க இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விளம்பரம் செய்யலாம். அதில் வீடு பற்றிய சகல வி‌ஷயங்கள் மற்றும் தொடர்பு முகவரி ஆகிய தகவல்களை அளிப்பதன் மூலம் எளிதாக விற்பனையை முடிக்கலாம்.

நம்முடைய சமுக பண்பாட்டு அடிப்படையில் வருடத்தின் சில குறிப்பிட்ட காலகட்டத்தை தேர்வு செய்துதான் பெரும்பாலானோர் வீடுகள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த நடைமுறைகளை அறிந்து செயல்படுவது முக்கியம். குறிப்பாக, மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் சில மாதங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்ற நிலையில் பலரும் வீடுகளை பார்க்க வருவது நடைமுறையில் உள்ளது. 

வாஸ்து கவனம்

குறிப்பாக, வாஸ்து ரீதியான குறைகளை இயன்ற அளவுக்கு சரி செய்த பின்னரே வீட்டை விற்க முயற்சிப்பது நல்லது. வாஸ்து என்பதை சமூக அளவில் பெரும்பாலானோர் முக்கியமாக கருதும் நிலையில், பொதுவான வாஸ்து குறைகள் இல்லாத வீடுகள் உடனடியாக விற்பனை ஆவதாக தெரிய வந்துள்ளது.

சந்தை மதிப்பு

பொதுவாக, அடுக்குமாடி வீடுகளின் வயது 5 ஆண்டுகள் என்றால் 15 முதல் 20 சதவிகித அளவுக்கு அதன் சந்தை மதிப்பிலிருந்து குறைவான விலை கேட்கப்படலாம். 5 முதல் 10 ஆண்டுகள் என்றால் 20 முதல் 25 சதவிகிதம் வரையும், 10 முதல் 15 ஆண்டுகள் என்றால் 25 முதல் 30 சதவீதம் வரையும் விலை குறைவாக கேட்கப்படலாம். 15 முதல் 20 ஆண்டுகள் வயது கொண்ட வீடுகள் கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவீதம் வரை சந்தை மதிப்பிலிருந்து விலை குறைவாக கேட்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்