அரசு வெளியிட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் புதிய கட்டிட விதிகள்

ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Update: 2019-02-08 23:00 GMT
ருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை (Tamil Nadu Combined Development and Building Rules - 2019) அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை பற்றி பார்க்கலாம்.

பல்வேறு சிறப்பம்சங்கள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் – 2019’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நகரமைப்பு செயல் திட்டம் – 2016, மத்திய அரசின் மாதிரி கட்டிட விதிகள், தேசிய கட்டிட வழிமுறைகள், தேசிய நகர்ப்புற போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக் கொள்கை மற்றும் பிற மாநிலங்களில் உள்ள விதிகள் ஆகியவற்றின் சிறப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கருத்துக்களும் பரிசீலனை

குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் பரிசீலித்து மேற்கண்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் புதிய விதிகளின் மூலம் மக்களின் அடிப்படை தேவையாக உள்ள வீட்டு வசதியை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்கில், வீடுகள் அமைப்பதற்காக அனுமதிக்கப்படும் தளப்பரப்பின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கான பொது விதிகள்

மேலும், பக்க இடைவெளிகள் குறைக்கப்பட்டு, கட்டிடத்தின் உயரமும், தளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில், கட்டுமான அமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யவும், விதிமீறல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றை தவிர்க்கும் வகையிலும் மேற்கண்ட பொது விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

விரைவான செயல்முறைகள்

இந்த புதிய விதிகளின்படி விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறைகள் ஆகியவை எளிமையாக்கப்பட்டு, விரைவில் கட்டிட அனுமதி அளிக்கும் வகையில் அவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், நகர உள் கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கச்சிதமாக திட்டமிட்டு அமைத்திட இந்த விதிகள் உறுதுணையாக அமையும் என்றும் அரசின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்