சொத்துவரி கணக்கீட்டை அறிய உதவும் மாநகராட்சி இணைய தளம்

சென்னையில் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் இதர கட்டிட உரிமையாளர்கள் ஆண்டுதோறும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தவேண்டும்.

Update: 2019-02-23 09:40 GMT
சென்னையில் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் இதர கட்டிட உரிமையாளர்கள் ஆண்டுதோறும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தவேண்டும். அவ்வாறு பெறப்பட்ட தொகை பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளுக்காக நகராட்சி செலவிடுகிறது.

சீராய்வு செய்யப்பட்ட வரி

ஒரு சொத்தின் வருடாந்திர வாடகை மதிப்பைக் கணக்கிட ‘ரீசனபிள் லெட்டிங் வேல்யூ’ (RLV) முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையானது நகரங்களில் உள்ள சொத்துக்களுக்கு அரை ஆண்டு சொத்து வரி கணக்கிட பயன்படுகிறது. சென்னையில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி விவரங்களுக்கான கணக்கீட்டு முறையை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இணைய தளத்தில் கணக்கீடு

பெருநகர சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தில் Property Tax Calculator என்ற புதிய இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சென்று, கேட்கப்பட்டுள்ள சொத்து விவரங்களை பூர்த்தி செய்து பழைய கணக்கீட்டு முறையில் அரையாண்டுக்கான சொத்து வரி விவரங்களை பார்க்கலாம். மேலும், தற்போதைய புதிய கணக்கீட்டு முறையில் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி விவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்

இணைய தளத்தில் சொத்து வரி கணக்கீட்டு முறை பக்கத்தில் சொத்து அடையாள எண்ணை ( Property ID) பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, சென்னை அடையார் பகுதியில் வசிக்கும் வீட்டு உரிமையாளராக இருந்தால், மாநகராட்சி மண்டலம் எண், கோட்டம் எண், வீட்டு உரிமையாளரின் ரசீது எண், அதற்கான துணை ரசீது எண் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். சொத்து வரி அட்டையை பார்த்து மேற்கண்ட எண்களை எளிதாக பூர்த்தி செய்யலாம்.

அதற்கு அடுத்ததாக வீடு அமைந்துள்ளது எந்த தளம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். 20-வது மாடியில் வசிப்பவர்களும் தேர்வு செய்யும் வகையில் தளங்களின் எண்ணிக்கை இடம் பெற்றுள்ளது. பின்னர், வீட்டின் பரப்பளவு மற்றும் பொது இடத்தை (UDS) உள்ளடக்கிய மொத்த பரப்பளவை பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து கணக்கீடு என்ற பகுதியை ‘கிளிக்’ செய்தால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி சொத்து வரி மதிப்பு, புதிய கணக்கீட்டு முறையிலான உயர்வுக்கு பிறகு சொத்து வரி மதிப்பு ஆகிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப ஒரு சதுர அடிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை அடையார் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள வீட்டின் சதுர அடிக்கான கட்டணமும், பெசன்ட் நகர் பகுதியில் வசிப்பவரின் சதுர அடிக்கான கட்டணத்திலும் வித்தியாசம் இருக்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

* சம்பந்தப்பட்ட ஆண்டுக்கான முதல் அரையாண்டு வரியை ஏப்ரல்-15 தேதிக்குள்ளும், இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர்-15 தேதிக்குள்ளும் முழுமையாக செலுத்த வேண்டும்.

* அதற்காக தனிப்பட்ட முறையில் கேட்பு அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது.

* தற்போதுள்ள கட்டிடத்தில் கூடுதல் அமைப்புகள் கட்டுவது, மாற்றங்கள் செய்வது, கட்டிடத்தின் குடியிருப்பு தன்மை மற்றும் உபயோகத் தன்மை மாற்றப்படுவது ஆகிய நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கவனத்துக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்