அறையில் வளரும் அழகு செடிகளை பாதுகாக்கும் எளிமையான வழிமுறை

வீடுகளில் வளர்க்கப்படும் அழகு செடி வகைகள் சூழலை பசுமையாக மாற்றுவது மட்டுமல்லாமல், அங்கே ஆக்சிஜன் என்ற பிராண வாயுவின் அளவை அதிகப்படுத்தி, காற்றையும் சுத்தம் செய்கின்றன.

Update: 2019-04-12 22:30 GMT
வீடுகளில் வளர்க்கப்படும் அழகு செடி வகைகள் சூழலை பசுமையாக மாற்றுவது மட்டுமல்லாமல், அங்கே ஆக்சிஜன் என்ற பிராண வாயுவின் அளவை அதிகப்படுத்தி, காற்றையும் சுத்தம் செய்கின்றன. அறைகளுக்குள் வளர்க்கப்படும் (Indoor Plants
) அழகு செடி, கொடி வகைகளுக்கு தண்ணீர் விடுவதும் மட்டும் போதுமான பராமரிப்பாக இருப்பதில்லை. சரியான இடைவெளிகளில் தண்ணீர் விட்டும்கூட சில வகை செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டதுபோல தோற்றமளிப்பதை பலரும் பார்த்திருக்கலாம். 

அதற்கான காரணம், பூஞ்சை காளான்கள் அல்லது வேறு இதர பூச்சி வகைகளால் அவை தாக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய பாதிப்புகளில், பல வகைகள் சாதாரணமாக கண்களால் பார்த்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும் என்ற வி‌ஷயத்தை தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

பூச்சிகள் தாக்குதலை தவிர்க்க பலரும் ரசாயனங்களை பயன்படுத்துவது வழக்கம். அவை, குறைந்த அளவில் இருந்தாலும் வீட்டில் வசிப்பவர்களுடைய உடல் நலனை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருக்கலாம். இந்த நிலையில், ரசாயனங்களை பயன்படுத்தாமல் மிக எளிய ஒரு வழிமுறையை பயன்படுத்தி செடிகளில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதல்களை தவிர்ப்பது பற்றிய குறிப்பை இங்கே காணலாம். 

இந்த முறையில் வெறும் தீக்குச்சிகள் மட்டுமே பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, செடிகள் வளரும் தொட்டிகளில் உள்ள மண்ணில் சில தீக்குச்சிகளை செங்குத்தாக பதித்து வைப்பதாகும். அவ்வாறு பதிக்கும்போது அவற்றின் மருந்து உள்ள பகுதி மண்ணிற்குள்ளாக இருக்கவேண்டும். அந்த நிலையில் குச்சிகளின் வெளிப்பகுதி ஓரளவு வெளியில் தெரிவதுபோல இருக்கலாம்.   

அவ்வாறு பதித்த தீக்குச்சிகளின் முனையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய ரசாயனங்கள் மண்ணில் கலந்து கண்ணுக்கு தெரியாத பூச்சிகளின் தாக்குதலை அகற்றுகின்றன. அதன் மூலம் செடிகள் மீண்டும் புத்துணர்வுடன் வளர்வதாக தெரிய வந்துள்ளது. தீக்குச்சிகளை சுமார் ஒரு வார காலம் அப்படியே விட்டு வைத்து, பின்னர் அகற்றி விடலாம். குறிப்பாக, இந்த முறையில் பயன்படுத்தப்பட்ட தீக்குச்சிகளை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்