அசையா சொத்து வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய தகவல்கள்

பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

Update: 2019-05-24 22:45 GMT
பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.  

*    அதிகாரம் பெற்ற முகவரிடம் (Power Of Attorney) சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம். மேலும், அதிகாரம் அளித்தவர் உயிருடன் இல்லையென்றால் அந்த அதிகாரப்பத்திரம் செல்லாது. 

* நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் நிலையில் அதற்கான உரிமை, உடைமை மற்றும் அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வது முக்கியம். 

*    சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை வங்குவதற்கு நீதிமன்ற அனுமதி அவசியம். 

*   நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாத நிலையில், வாரிசு சான்றிதழ் மூலம் வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் சம்மதத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். வாரிசுதாரர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடக்கவேண்டும்.  

* சொத்துக்கான மூல ஆவணத்தை பெற்று தக்க சட்ட ஆலோசனை பெறவேண்டும். மூல ஆவணம் இல்லாத சொத்துக்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடமானம் வைக்கப்பட்டதாக இருக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு மூல ஆவணம் அடமானத்தில் இருக்கலாம். அந்த நிலையில் வாங்கப்படும் வீட்டின் மீது வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற சான்றிதழ்
(NOC)
பெறுவது அவசியம். 

*    சொத்தின் மீதான முந்தைய பரிவர்த்தனைகளை கண்டறிய 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து வித அனுமதிகளையும் பெற்று சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபட அளவுக்கும் அதிகமாக, கட்டிடப் பரப்பளவு இருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரலாம்.

*    சொத்தின் பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் உள்ள நிலையில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டு, அதை பதிவு செய்து கொள்வதுதான் சட்டப்படி பாதுகாப்பானது. அந்த ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் செய்திகள்