பரிவர்த்தனை பத்திரம் மூலம் சொத்துக்களுக்கான உரிமை மாற்றம்

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பணத்தை பயன்படுத்தாமல் பண்டமாற்று முறையில் தேவையான பொருட்களை பழங்கால மக்கள் பெற்றனர்.

Update: 2019-08-10 09:56 GMT
பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடைமுறை மாற்றங்கள் காரணமாக, பண்டமாற்று முறை இப்போது இல்லை. ஆனால், வீடு, மனை, விவசாய நிலம் போன்று ஒருவரது பெயரில் உள்ள சொத்துக்கு ஈடாக இன்னொருவர் பெயரில் உள்ள சொத்தை, சொத்துக்கள் பரிமாற்றம் (Exchange of Property) என்ற நடைமுறையில் பரஸ்பர உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம். அதாவது, தாம்பரம் பகுதியில் தனது பெயரில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்தை வைத்துள்ள ஒருவரும், அதே மதிப்புக்கு பூந்தமல்லியில் தனது பெயரில் ஒரு சொத்தை வைத்துள்ள இன்னொருவரும், பரிவா்த்தனைப் பத்திரம் (Deed of Exchange) மூலம் சொத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள இயலும்.

வேறுபாட்டுக்கேற்ப பண மதிப்பு

சொத்து பரிமாற்றத்துக்கான சட்ட நடைமுறைகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வகுக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள பிரிவுகள் வழிகாட்டும் அடிப்படையில் பணம் கை மாறாமல், ஒரு சொத்தை கொடுத்து அதன் மதிப்புக்கு குறைவில்லாத இன்னொரு சொத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதில் இரண்டு தரப்பிலும் சொத்துதான் பரிமாற்றப் பொருளாக இருக்க வேண்டும். இரண்டு சொத்துகளின் மதிப்பில் வேறுபாடு உள்ள நிலையில், மதிப்பை சமன் செய்யும் வகையில் ஒரு பகுதி தொகையை பணமாக அளிக்கலாம். இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட ஆவணத்தில் இரண்டு தரப்பினருமே, ஒருவருக்கொருவர் விற்பவராகவும், வாங்குபவராகவும் இருப்பார்கள். வழக்கமான கிரய பத்திரங்கள்போல் இல்லாமல், சொத்து பரிமாற்ற பத்திரங்களை தயாரிப்பது மற்றும் பதிவு செய்வது ஆகியவற்றில் தனிப்பட்ட நடைமுறைகள் உள்ளன.

சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல்

மேலே குறிப்பிட்ட நடைமுறைகளின் அடிப்படையில் சொத்து பரிவர்த்தனை பத்திரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வெவ்வேறு பகுதிகளில் உள்ள சொத்துக்களை பரிவர்த்தனை செய்து கொள்ளும்போது, இரண்டில் ஏதாவது ஒன்றின் அமைவிடத்துக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவை மேற்கொள்ள வேண்டும். ஒரு அலுவலகத்தில் பதிவு நடக்கும்போது, மறுசொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார் பதிவாளர் அலுவலகத்துக்கு இந்த பதிவு பற்றி தெரிவிப்பது அவசியம். மேலும், சம்பந்தப்பட்ட சொத்தின் தற்போதைய உரிமை நிலவரம் பற்றியும் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்