வீடு-வீட்டுமனை கடனுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்

மத்திய ரிசர்வ் வங்கி, நடப்பு ஆண்டில் நான்கு முறை ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 5-வது முறையாக 0.25 சதவிகிதம் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போதைய ரெப்போ ரேட் 5.40 என்ற அளவிலிருந்து 0.25 சதவிகிதம் குறைந்து 5.15 சதவிகிதமாக கணக்கிடப்படும்.

Update: 2019-10-12 09:53 GMT
கார்ப்பரேட் வரி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் முன்னதாக குறைத்திருக்கிறது. அதனால், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், தேவைகளுக்காக கடன் பெற விரும்பும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் மாற்றம்

தற்போது வரை வங்கிகள் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில், அதாவது, டெபாசிட் மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயித்து வந்தன. இனிமேல், ரெப்போ ரேட் அடிப்படையில் வீட்டுக்கடன் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் கடன்களுக்கான வட்டி ஆகியவை கணக்கிடப்பட்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் வங்கிகள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

வழக்கமான எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதத்தில் மாதாந்திரத் தவணை நிலையாக இருக்கும். அதாவது, வங்கிகள் மாதத் தவணையை மாற்றாமல், கடனுக்கான கால அளவில் மாற்றங்கள் செய்யும். இந்த நிலையில், ரெப்போ அடிப்படையில் வட்டி விகிதமானது ஒவ்வொரு மாதத்துக்கும் கணக்கிடப்படும்.

ரிசர்வ் வங்கி அறிக்கை

வட்டி விகிதத்தை குறைத்து மாற்றியிருப்பது பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கையில், பொருளாதார நிலை மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், ஒரு நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தைக் குறைப்பது உலக அளவில் வழக்கமாக இருந்து வருகிறது. வட்டி குறைப்பு அடிப்படையில் அதைச் சார்ந்துள்ள இதர வங்கிகள் பலன் அடைகின்றன. அந்தப் பலனை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கடன் வட்டியைக் குறைப்பதன் மூலம், பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதார நிலை உயரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணப்புழக்கம்

பணப்புழக்கம் குறைவது, தொழில்துறை மந்தம் ஆகிய சூழலில் ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைத்து அறிவிக்கும். அப்போது, வங்கிகள், வாடிக்கையாளர் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும். அதனால், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைப்பதால் நிறுவனங்கள் அவர்களுக்கான முதலீட்டை, வங்கிக் கடனாகப் பெற முன்வருவார்கள். மேலும், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து, மக்களின் வாங்கும் திறன் அதிகமாகும் அடிப்படையில் பணப்புழக்கம் கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்