‘சன்ஷேடு’ கட்டமைப்பில் கச்சிதமான முறை

வீடுகள் கட்டமைப்பில் ஜன்னல் அல்லது கதவுகள் அமைந்துள்ள சுவருக்கு மேற்புறத்தில் சூரிய வெப்ப தடுப்புக்காக ‘சன்ஷேடு சிலாபுகள்’ அமைக்கப்படுவது வழக்கம். அவை, சுவரிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை அடி அளவில் வெளிப்புறம் நீட்டப்பட்டிருப்பதுடன், சுமார் இரண்டு அங்குலம் தடிமனும் கொண்டிருக்கும்.

Update: 2019-10-12 10:42 GMT
பல இடங்களில் அவற்றில் விழும் மழைநீர் தக்க விதத்தில் உடனடியாக வழிந்து கீழே விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதில்லை. அவ்வாறு தேங்கும் தண்ணீர் காரணமாக அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் சுவர்களிலும் பிரதிபலிக்கும் என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புதியதாக வீடுகள் அமைக்கும்போது, பிளான்படி கதவுகள், ஜன்னல்கள் அமைப்பதில் உள்ள கவனத்தை, அவற்றின் சன்ஷேடு அமைப்பில் செலுத்துவதில்லை என்று சொல்லப்படுகிறது. கட்டிடத்தின் அமைப்பிற்கேற்ப நீளம் மற்றும் அகலம் கொண்ட ‘சன்ஷேடு சிலாப்களில்’ விழும் மழை நீர் உடனடியாக வழிந்து கீழே சென்று விடுவதுபோல தக்க வாட்டம் கொடுத்து அமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

பல பகுதிகளில் கட்டிடத்தின் வெளிப்புற தோற்றம் என்ற கோணத்தில், ‘சன் ஷேடு’ சிலாப் விளிம்புகளில் ஒரு அங்குலம் உயரத்தில் பாத்தி போன்ற தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. அதில் தேங்கும் மழை நீர் வெளியேற சிறிய குழாய் பொருத்தப்பட்டிருக்கும். மழைக்காலங்களில் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், தண்ணீர் வெளியேறாமல் தேங்கிவிடும். வெளிப்புற சுவர்களில் அமைந்துள்ள அந்த ‘சிலாப்’ அமைப்பை எளிதாக சுத்தம் செய்யும் வகையில் இருக்காது.

அந்த நிலையில், ‘சிலாப்களில்’ தேங்கும் தண்ணீர் சுவர்களுக்குள் இறங்குவதால் அதன் வலிமை பாதிக்கப்படும். அதாவது, சுவர் அல்லது பீம்கள் ஆகியவற்றுக்கு உள்புறத்தில் கம்பிகள், ஈரக்கசிவு காரணமாக பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதனால், நீர் எளிதாக வழிந்து செல்ல வழக்கத்தை விட கூடுதலான வாட்டம் கொடுத்து ‘சன் ஷேடு சிலாப்களை’ அமைப்பதுதான் பாதுகாப்பானது.

மேலும் செய்திகள்