சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்தும் சட்டம்

வீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டத்தை (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) 2017-ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது.

Update: 2019-11-02 10:21 GMT
தமிழக ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாடு அரசு இதழில் தமிழ்நாடு சட்டம் 42/2017 என்று வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு சட்டம் 39/2018 என்று மறு வெளியீடு செய்யப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் விதிகள்-2019, பிப்ரவரி-22, 2019 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மே மாதம் 22-நாள் வெளியிடப்பட்ட அவசரச் சட்டம் மூலம் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மேலும் 120 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது.

முந்தைய வாடகை சட்டம்

இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டம்-1960, வாடகைக் குடியிருப்பு வசதிகள் குறைவாகவும், ரியல் எஸ்டேட் தொழில் அவ்வளவாக வளர்ச்சியடையாத காலகட்டத்தில் இயற்றப்பட்டது என்பது கவனத்திற்குரியது. இன்றைய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைந்த நிலையிலும், தனியார் வீடுகள், வாடகை குடியிருப்புகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில், ஏற்கனவே இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் காலத்துக்கு ஏற்ப இல்லை என்று அறியப்பட்ட நிலையில், நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்-2017, என்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது.

புதிய சட்டத்தின் நோக்கங்கள்

வாடகைதாரர் மற்றும் உரிமையாளர் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின்படி வாடகை முறைப்படுத்தல், வாடகைதாரர் மற்றும் உரிமையாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைச் சமன் செய்வது ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டத்தின் மூலம், அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை எளிதாக பதிவு செய்யும் வகையில் வலைதளத்தை (www.tenancy.tn.gov.in) கடந்த பிப்ரவரி மாதம் அரசு தொடங்கி இருக்கிறது. சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் தங்களின் வாடகை ஒப்பந்தங்களை வலைதளம் மூலம் பதிவு செய்யலாம்.

பதிவு அவசியம்

சென்னையைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 தாலுகாவுக்கான வாடகை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் பதிவுக்கு நிகராக உள்ள 8 அதிகாரிகள் இந்த ஆணையத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய சட்டத்தின்படி வீடு, கடை, அலுவலகம் எதுவானாலும் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும். வாடகைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவையான ஆவணங்களை கூர்ந்தாய்வு செய்து, பயனீட்டாளர்களுக்கு வாடகை ஒப்பந்த எண்களை அளிப்பார்கள். வாடகை நீதிமன்றங்கள் சட்டப் பிரிவு 32-ன் கீழ் அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு இதழில் 2019 மே மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான வாடகைத் தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுநடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்