கட்டுமானத்துறைக்கு சிறப்பு திட்டம் மூலம் நிதியுதவி

இந்திய அளவில் கட்டுமானத்துறை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளது.

Update: 2019-11-16 12:53 GMT
கடந்த ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ‘ரெரா’ சட்டம், ஜி.எஸ்.டி வரி, நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை ஆகியவை கட்டுமானத்துறையின் போக்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில், தொழில் துறையினருக்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து, பெருநிறுவனங்களுக்கான வரி விதிப்பு, இதுவரை இல்லாத அளவான 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் தாமதம்

கடந்த காலங்களில் இந்திய அளவில் 7 முக்கிய நகரங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவில்லை என்றும், தேசிய அளவில் 1500 கட்டுமான திட்டங்கள் முடிக்கப்படாமல் முடங்கியுள்ளதாகவும் தனியார் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது. மேலும், சொந்த வீடு வாங்கும் நோக்கில் கட்டுமான திட்டத்தில் இணைந்த சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் வீடுகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. குறித்த காலத்தில் வீடுகளை கட்டி முடித்து, வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படும் நிலை ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

விதிமுறைகளில் மாற்றம்

கட்டுமானத்துறையில் நிலவும் நிதி சார்ந்த சிக்கல்கள் பற்றி ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசித்து வந்தது. மேலும், கட்டுமானத்துறையில் முதலீடு செய்வதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறையினருக்கு உதவும் வகையில், தற்போதுள்ள விதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, சில வாரங்களுக்கு முன்னர் மும்பை தேசிய பங்கு சந்தை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

அரசின் நிதி உதவி

இந்த சூழலில், முடங்கிய கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் விதமாக ரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு சாளரம் (Special Window) மூலம் நிதி உதவி அளிக்கப்படும். அதற்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்குவதுடன், மீதமுள்ள ரூ. 15 ஆயிரம் கோடி பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி ஆகியவற்றிடமிருந்து பெறப்படும். அரசு அளிக்கும் ரூ. 25 ஆயிரம் கோடி மாற்று முதலீட்டு நிதியம் (Alternative Investment Fund -AIF) மூலம் ஒரு கட்டுமான திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ. 400 கோடி அளவுக்கு நிதி அளிக்கப்படும். அதனால், போதுமான நிதி ஆதாரம் இல்லாமல் முடங்கிய மலிவு விலை வீடுகள் மற்றும் மத்திய தர மக்களுக்கான கட்டுமான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டுமானத்துறையினர் எதிர்பார்ப்பு

மேலும், வாராக்கடன் மற்றும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு உட்பட்ட திட்டங்கள் அதற்கான நிதி உதவி பெற்று கட்டுமான பணிகளை தொடங்கலாம். வீடு வாங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள், கடன் கொடுத்தவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, சிறப்பு சாளரத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கட்டுமானத்துறை சார்ந்த தொழில் கள் மற்றும் வர்த்தகம் ஆகியவை வளர்ச்சி பெறும் என்பது கட்டுமான துறையினரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்