வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்

சொந்தமாக ஒரு வீடு என்ற கனவு இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பொதுவான விஷயமாக மாறி வருகிறது.

Update: 2019-11-30 08:45 GMT
சொந்தமாக ஒரு வீடு என்ற கனவு இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பொதுவான விஷயமாக மாறி வருகிறது. அரசின் சலுகைகள் மற்றும் வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான நடுத்தர மக்கள் வங்கிக் கடன் பெற்று கட்டிய வீட்டில் குடியேறுகிறார்கள். அதன் பின்னர், பல்வேறு செலவுகளுக்கு மத்தியில் வீட்டுக் கடனுக்கான தவணை என்பது சுமையாக மாறி விடுகிறது. நடுத்தர மக்களின் மாதாந்திர தவணை என்ற சுமையை எவ்வாறு குறைத்துக்கொள்ள இயலும் என்பது பற்றி வங்கியியல் வல்லுனர்கள் தரும் தகவல்களை இங்கே காணலாம்.

* வீட்டுக்கடனை ‘புளோட்டிங் ரேட்’ அடிப்படையில் வாங்கினால், கடனுக்கான வட்டி குறைக்கப்படும் சமயத்தில் மாதாந்திர தவணைத் தொகையும் குறையும்.

* கடன் அளிக்கும் வங்கியின் வட்டி விகிதத்தை மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கடனுக்கான பிராசஸிங், டாக்குமென்டேஷன், இன்சூரன்ஸ், லீகல் ஒப்பீனியன் ஆகிய கட்டணங்களில் உள்ள வித்தியாசங்களையும் கவனத்தில் கொள்ளலாம்.

* ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறக்கூடும். அதனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வட்டி விகிதம் எவ்வளவு கணக்கிடப்படுகிறது என்று அறிந்து கொள்வது நல்லது. காரணம், வட்டி விகிதத்தில் உள்ள மாறுதல்களுக்கேற்ப மாதாந்திர தவணை தொகை அளவும் மாறுபடலாம். வட்டி விகிதம் குறையும்போது மாதாந்திர தவணையும் இயல்பாகவே குறையும்.

* ஒருவரது மாத வருவாயை அடிப்படையாகக் கொண்டே மாதாந்திர தவணை தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், குடும்ப வருமானம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறுகிய காலத்தை தேர்வு செய்வதன் மூலமும், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் நீண்ட கால அவகாசம் கொண்ட தவணை முறைகளையும் தேர்வு செய்து பொருளாதர சிக்கலை தக்க முறையில் நிர்வகிக்கலாம்.

* தனிப்பட்ட விருப்பம் மற்றும் குடும்ப ரீதியான சேமிப்பு ஆகிய முதலீடுகளின் மூலம் கிடைக்கும் தொகை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் கடன் கணக்கில் பிரீபேமன்ட் ஆக வரவு வைப்பது நல்லது. அதன் மூலம் கடனுக்கான அசல் தொகையில் குறிப்பிட்ட அளவு குறைவதுடன், மாதாந்திர தவணையும் குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

* பல குடும்பங்களில் வங்கி வைப்பு நிதி, அஞ்சலகச் சேமிப்பு என பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. கடனுக்கான வட்டி குறைக்கப்படும் சூழலில், சேமிப்புகளுக்கான வட்டியும் குறையும் வாய்ப்பு உள்ளது. அதனால், அந்த முதலீட்டை வீட்டுக் கடனுக்காகச் செலுத்துவதன் மூலமும் மாதாந்திர தவணைத் தொகை குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்