மீனவர் குடும்பங்களுக்கான வீட்டு வசதி திட்டம்

சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாம் முழுமை திட்டம்-2026 பற்றி சி.எம்.டி.ஏ அளித்துள்ள வரைவில் மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2020-01-25 11:28 GMT
கடற்கரை நகரமாக உள்ள சென்னை கடற்கரையோர பகுதிகளில் 84 மீனவர் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 43 கிராமங்கள் சென்னை நகர எல்லைக்குள் அமைந்துள்ளன. மீதி உள்ள 30 கிராமங்கள், சென்னையின் வடக்கு பகுதியில் மீஞ்சூர் வரையும், மற்ற 11 கிராமங்கள் சென்னை தெற்கு பகுதியான உத்தண்டி வரையும் அமைந்துள்ளன. அந்த பகுதிகளில் வசித்து வரும் மீனவர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

ஏனென்றால், அவர்களுக்கான குடியிருப்புகள் அவர்களின் பணியிடமான, கடலுக்கு அருகில் உள்ளவாறு அமைக்கப்பட வேண்டும். அதே சமயம் கடலோர ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையிலான கட்டுமான அபிவிருத்தி திட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சராசரியாக ஒரு குடும்பத்தில் 3-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் என்ற அளவில் சுமார் 36,162 மீனவர் குடும்பங்கள் சென்னைப் பெருநகரில் வசித்து வருகின்றன. 

அவர்கள் உறுதியான மற்றும் உறுதியற்ற கட்டுமான பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்ட 31,688 வீடுகளில் வசித்து வருகிறார்கள். அவற்றில் சுமார் 16,482 வீடுகள் சென்னையில் மட்டும் உள்ளன. அவற்றில் சுமார் 8439 வீடுகள் சென்னை பெருநகர்ப் பகுதியின் வடக்கு பகுதியிலும், சுமார் 6767 வீடுகள் சென்னைப் பெருநகர்ப்பகுதியின் தெற்குப்புறத்திலும் உள்ளன.

கடந்த 2000 மற்றும் 2005-ம் ஆண்டுகளுக்கிடையே மீனவர் மக்கள் தொகை பெருக்கம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அடிப்படையில், தற்போது அது இன்னும் கூடுதலாக இருக்கலாம். மீனவர்களுக்கு வீட்டு வசதி அளிக்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு மீன்வளத் துறை ஆகியவை மேற்கொண்டு வருகின்றன. 

மேலும் செய்திகள்