மின்சார பயன்பாட்டில் ஒரு முனை மற்றும் மும்முனை இணைப்பு

வீடுகளுக்கு அளிக்கப்படும் ஒருமுனை மற்றும் மும்முனை மின்சார இணைப்பு பற்றி, தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் தெரிவித்துள்ளவற்றை இங்கே காணலாம்.

Update: 2020-01-25 12:10 GMT
உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து, கம்பிகள் மூலம் கொண்டு வரப்படும் மின்சாரம், வீடுகளுக்கு ஒரு சுற்று வழியாக அளிக்கப்படுவது ஒரு முனை மின்சாரம் (Single Phase) ஆகும். அது மாறு மின்சாரம் (Alternate Current) என்று சொல்லப்படும். நொடிக்கு 50 தடவை நேர்முனை, 50 தடவை எதிர்முனை என்று மாறி வருவதால் இந்த பெயர் வழங்கப்படுகிறது.

உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கொண்டு வரப்பட்டு மூன்று சுற்றுகளின் வழியாக வீடுகளுக்கு அளிக்கப்படுவது மும்முனை மின்சாரம் (Three Phase) ஆகும். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றை பொறுத்து ஒருமுனை அல்லது மும்முனை மின்சாரத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

ஒருமுனை மின்சார விநியோகத்தில் அவ்வப்போது மின் தடங்கல் அல்லது மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவிர்க்க விரும்புபவர்கள் வீட்டில் மும்முனை இணைப்பை பயன்படுத்தலாம். அதன் மூலம், மூன்று முனைகளில் எந்த முனையில் மின்சாரம் வருகிறதோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முனை இணைப்புக்கு ஒரு மெயின் சுவிட்ச், மும்முனை இணைப்புக்கு மூன்று மெயின் சுவிட்சுகள் அமைக்கப்படும்.

கம்பிகள் மூலம் வழங்கப்படும் மின் விநியோகத்தில் எப்போதும் சீரான அளவில் மின்னழுத்தம் இருப்பதில்லை. சில சமயங்களில் வீட்டில் உள்ள பெரும்பாலான மின் சாதனங்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படலாம். அப்போது மின்னோட்ட அளவு அதிகரிப்பதால், மின் சாதனங்கள் பாதிக்கப்படும். அதை தவிர்க்கும் வகையில் மின் இணைப்புடன் ‘எர்த்’ கம்பி மற் றும் ‘பியூஸ்’ ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

அதன் காரணமாக, அதிக அளவு மின்சாரம் வரும்போது ‘பியூஸ்’ இணைப்பில் உள்ள கம்பிகள் உருகி, மின்சாரம் வருவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், ஒரு விசையை இயக்கி மின்னோட்டத்தை தடுக்கும் வகையில் மெயின் சுவிட்சும் இணைக்கப்படுகிறது. அத்தகைய ‘பியூஸ்’ மற்றும் ‘மெயின் சுவிட்ச்’ இணைப்புகளை சுவரில் மிகவும் உயரமாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ அமைத்து விடாமல், தகுந்த உயரத்தில் அமைப்பது முக்கியம்.

மேலும் செய்திகள்