‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்

இந்திய அளவில் 2030–ம் ஆண்டு மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவிகிதத்தை நகர்ப்புறங்கள் கொண்டிருக்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Update: 2020-02-07 22:30 GMT
க்கள் தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்கு குடிபெயர்ந்ததால் நெருக்கடி அதிகரித்தது. குடியிருப்பு தேவைகளை பூர்த்தி செய்ய புறநகர் விரிவாக்கத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி, கூட்ட நெரிசல், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், சாலைகள் பராமரிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண வேண்டிய சூழல் உருவானது. கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பயன்பாடு காரணமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற நவீன உள் கட்டமைப்புகள் கொண்ட நகர்ப்பகுதிகளுக்கான தேவை எழுந்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசு இந்திய அளவில் 100 நகரங்களை தேர்வு செய்து 2015–16 மற்றும் 2019–20 ஆகிய 5 நிதியாண்டுகளுக்குள் அவற்றை சீர்மிகு நகரங்களாக (ஷினீணீக்ஷீt சிவீtஹ்) உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

தண்ணீர்  பயன்பாடு

இந்திய அளவில் 2030–ம் ஆண்டு மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவிகிதத்தை நகர்ப்புறங்கள் கொண்டிருக்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 2025–ம் ஆண்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1951–ம் ஆண்டில் நகரங்களில் தனி நபர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு சராசரி 140 லிட்டராக இருந்தது. 2001–ம் ஆண்டில் அந்த அளவு 50 லிட்டராக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தண்ணீரின் பற்றாக்குறை அதிகரிப்பதால் 2025–ம் ஆண்டில் இந்த அளவு சுமார் 33 லிட்டராக குறையலாம் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. சுகாதாரம், கழிப்பிடம், கழிவுநீர் அகற்றுதல், மழைநீர் வடிகால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் மேலை நாடுகளைப்போல ‘ஸ்மார்ட்டாக’ மாறுவது அவசியம்.

உலக நாடுகளில்  ‘ஸ்மார்ட் சிட்டி’

சர்வதேச அளவில் நியூயார்க், லண்டன், டோக்கியோ, பெர்லின் உள்ளிட்ட பல நகரங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்று அடையாளம் காணப்படுகின்றன. அவற்றின் சாலைகள் கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப ரீதியிலான நிர்வாக மாற்றங்கள் காரணமாக அந்த நகரங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகச் சமாளிக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. அந்த வகையில் எதிர்வரக்கூடிய 10 ஆண்டுகளில் ஏற்படும் மக்கள்தொகைப் பெருக்கம், இடம் பெயர்பவர்கள் எண்ணிக்கை, தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் திட்டமிட்டு உருவாக்கி, வளர்ச்சி அடையும் வகையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால் வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க முடியும். அதனால், புதிய வேலை வாய்ப்புகளும் பெருகும் என்பது பொருளாதார அறிஞர்கள் கருத்தாகும்.

தமிழகத்தின்  சீர்மிகு  நகரங்கள்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கான பல்வேறு கட்ட தேர்வுகளில் தமிழக அளவில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தலா ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த 11 நகரங்களில் ரூ.10,440 கோடி மதிப்பீட்டில் 357 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 28 உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், கழிவுநீர் அகற்றும் மேலாண்மை, மழை நீர் வடிகால் வசதி, போக்குவரத்து வசதி, பசுமை மற்றும் திறந்தவெளி பகுதிகள் ஏற்படுத்துதல் போன்றவற்றை உறுதி செய்யும் ‘அம்ருத்’ திட்ட செயலாக்கத்தில் தமிழகம் 13–வது இடத்திலும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட செயலாக்கத்தில், 120.72 புள்ளிகளுடன் 7–வது இடத்திலும் உள்ளது.

மேலும் செய்திகள்