பழைய கட்டிடங்களை இடிப்பதில் கூடுதல் கவனம் தேவை

நெரிசலான நகர்ப்புறங்களில் உள்ள பழைய அல்லது பழுதான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியதாக இருக்கும்.

Update: 2020-02-07 23:15 GMT
நெரிசலான நகர்ப்புறங்களில் உள்ள பழைய அல்லது பழுதான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியதாக இருக்கும். அத்தகைய இடிப்பு பணிகளின்போது, பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. அந்த சமயத்தில் அருகில் உள்ள வீடுகள் அல்லது இதர கட்டிடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ளவேண்டும். அது பற்றி கட்டுமான வல்லுனர்கள் அளிக்கும் குறிப்புகளை காணலாம்.  

பாதுகாப்பு அம்சங்கள்

பழுதான நிலையில் உள்ள அல்லது பழைய கான்கிரீட் அமைப்புகளை இடிக்கும்போது அவை திடீரென்று சாய்ந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், இடிக்கும்போது உண்டாகும் தூசி துரும்புகளால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவற்றை தவிர்க்க தகரத்திலான தடுப்புகளை அமைப்பதுடன், பணியில் ஈடுபடும் வேலையாட்கள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கிறார்களா என்பதை கவனிப்பது முக்கியம். 

மறு சுழற்சி

பழைய கட்டிடத்தை இடிப்பது, இடிபாடுகளை தக்க முறையில் அப்புறப்படுத்துவது ஆகிய இரண்டு பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரர் செய்வதே நல்லது. கட்டிட இடிபாடுகளை தக்க விதத்தில் அகற்றி, யாருக்கும் பாதிப்பில்லாத இடத்தில் போட தகுந்த ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் மறு சுழற்சி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தூளாக உடைத்தும் பயன்படுத்தலாம். 

மீண்டும் உபயோகம்

பழைய கட்டுமானங்களின் மரக்கதவுகள், ஜன்னல்கள், இரும்பு பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக பிரித்து எடுக்க வேண்டும். விருப்பத்திற்கேற்ப அவற்றை மீண்டும் உபயோகப்படுத்தலாம் அல்லது விற்பனை செய்து விடலாம்.

இன்சூரன்ஸ் அவசியம்

ஜன நெரிசல் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் இடிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு அனுபவமும், அங்கீகாரமும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமானது. அடுக்கு மாடிக்கட்டிடங்களின் இடிப்பு பணிகளில் பாதுகாப்பு சார்ந்த வி‌ஷயங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருப்பது முக்கியமானது.

பணிகளுக்கான ஒப்பந்தம்

கட்டுமான இடிபாடுகளை அப்புறப்படுத்துவது, சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களது பாதுகாப்பு ஆகிய வி‌ஷயங்களை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், எவ்வளவு நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்பது போன்ற விபரங்கள் கொண்ட ஒப்பந்தத்தை கட்டமைப்பு உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரும் ஏற்படுத்திக்கொள்வது இரு தரப்புக்கும் நல்லது.

மேலும் செய்திகள்