வீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

ஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.

Update: 2020-03-07 09:45 GMT
ரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படும் வகையில் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (Tamilnadu Real Estate Regulatory Authority - TNRERA) புதிய நிபந்தனை விதித்துள்ளது. அதாவது, எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்பட உள்ள குடியிருப்பு திட்டங்கள் அல்லது 5,382 சதுரடி (500 சதுர மீட்டர்) அல்லது அதற்கு மேலான நிலப்பரப்பை, வீட்டு மனைகளாக மேம்படுத்தும் நிலையில் ஒழுங்கு முறை குழுமத்தில் முறையாக பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பது, மனைகளை பிரிப்பது ஆகிய நிலைகளில் இந்த விதியை அமல்படுத்துமாறு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) மற்றும் நகர் ஊரமைப்புத்துறை (டி.டி.சி.பி) ஆகிய அமைப்புகளுக்கு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் அறிவுறுத்தி உள்ளது.

அது சம்பந்தமான உத்தரவு கடிதங்களை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி ஆகியவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன. இதையடுத்து, புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்வதும் ஒரு நிபந்தனையாக சேர்க்கப்பட் டுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல், மனைகள் விற்பது இயலாது. அப்படி விற்பனை செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் ஒழுங்குமுறை குழுமம் ஆகியவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மனை விற்பனையை முறைப்படுத்தல் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், அங்கீகாரம் அளிக்கப்பட்ட மனைக்கான வரைபடத்தில் இருப்பதைவிட, கூடுதல் உட்பிரிவுகள் செய்து மனைகளை விற்பதும் அறியப்பட்டுள்ளது. அத்தகைய மனை மேம்பாட்டாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நகரமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்