வீட்டின் உள் அலங்காரங்கள் மாறியுள்ளது ! நம்மையும் மாற்றியுள்ளது !!

நம்மில் பெரும்பாலோர் தற்போது பகல் பொழுதில் அதிகமான நேரத்தை வீட்டில் செலவழிக்கிறோம். கொரோனா பெரும் தொற்று காரணமாக பலர் வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை கவனிக்கின்றனர்.

Update: 2021-08-21 15:54 GMT
குழந்தைகள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு. மற்றபடி அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே செல்ல அரசும் நம்மை அடிக்கடி அறிவுறுத்தி கொண்டிருப்பதால் முன்பை போல் தேவையில்லாமல் அதிகமாக வெளியே சுற்றுவது இல்லை. சரி இதனால் எல்லாம் என்ன மாற்றம் வீட்டுக்குள் வந்து விட்டது என பார்ப்போம். பொதுவாக முன்னர் உண்டு உறங்குவதற்கும் வார இறுதி நாட்கள் விடுமுறை நாட்கள் போன்ற காலங்களில் மட்டுமே வீட்டில் பகல் பொழுதில் அதிக நேரம் இருப்போம். மாறாக தற்போது வீட்டில் அதிக நேரம் இருக்கின்றோம். எப்பொழுதுமே எல்லோருக்கும் தான் இருக்கக்கூடிய இடம் தனக்கு ஏற்றபடி சுகமாக இருப்பதையேவிரும்புவர். 

இதன் காரணமாக ஒவ்வொருவர் வீடுகளும் உள் அலங்காரப் பொருட்களை மாற்றி அமைத்தல் என அவரவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற ஆரம்பித்துவிட்டது. வீடு என்பது எல்லாவற்றையும் சேமித்து வைக்கும் கிடங்கு என்ற நிலை மாறி தேவையான பொருட்கள், அத்தியாவசியமான பொருட்கள், தினப்படி நாம் உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் மட்டுமே வைத்துக் கொள்வது, அவற்றையும் நேர்த்தியான முறையில் அதற்கு உண்டான இடத்தில் வைத்து பராமரிப்பது, பழைய பழுதான பொருட்களை அகற்றுவது என்பது கொரோனா காலத்தில் பல வீடுகளில் இயல்பாகவே நடந்து விட்டது. அதையும் தாண்டி உள் அலங்காரங்கள் அவர்களுக்கு பிடித்த வண்ணத்திலும் சுவற்றில் புகைப்படங்கள் சித்திரங்கள் என அவரவர் ரசனைக்குஏற்பவும் இடம் பிடிக்கிறது. 

முன்பு வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றவர்கள் பார்த்தால் என்ன சொல்லுவார்கள் என்கின்ற கோணத்தில் இருந்தது மாறி எனக்கு எப்படி பிடித்திருக்கிறது எனக்கு எது சுகமாக இருக்கிறது நான் எதை ரசிக்கிறேன் என்கின்ற கோணத்தில் உள் அலங்காரங்கள் அமைய தொடங்கிவிட்டது. காரணம் இப்போது நாம் அதிகம் பேரை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. கிட்டத்தட்ட வீடு நம்முடைய உலகமாக மாறிவிட்டது. உலக நடப்புகள் அனைத்தும் தொலைக்காட்சி இணையதளம் வழியாக வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகிறது. பலர் வீட்டில் புரொஜெக்டர் வைத்து மினிதிரை அரங்கை உருவாக்க ஆரம்பித்து விட்டனர். கிடங்காக வைத்துக்கொண்டிருந்த அறைகள் எல்லாம் உடற்பயிற்சி கூடங்களாக மாறுகின்றன. எப்போதாவது மொட்டை மாடிக்கு செல்வது மறைந்து போய் தினமும் மொட்டைமாடி வாக்கிங். அதுமட்டுமல்ல மொட்டைமாடியில் செடி கொடிகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். பெரிய பண்ணை வீடுகள் போன்ற பங்களாக்களில் சிறியதும் பெரியதுமாக நீச்சல் குளம் கட்ட ஆரம்பித்துள்ளனர். இப்படியாக வீட்டின் உள் அலங்காரங்கள் ரம்மியமாக மாறிவருவது நாம் அனைவருமே வீட்டிற்குள்ளேயே வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து இருப்பதை உணர்த்துகிறது. மேலும் குடும்ப உறவுகளும் பலப்பட்டு பக்கத்து வீடு எதிர் வீட்டுக்காரர் நட்பும் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்