பாதுகாப்புக்கு உத்தரவாதம்... ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கதவுகள்

கதவுகளில் மரக்கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் பற்றி அறிந்திருப்போம். ஆனால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட கதவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கதவுகளின் சிறப்பு தன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Update: 2021-12-04 12:43 GMT
கதவுகள் என்பது ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டிய ஒன்று. அப்படிப்பட்ட கதவுகள் டபுள் பாதுகாப்புடன் கிடைக்கிறது என்றால் அதைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

*முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்டு தோற்றத்தில் மரக்கதவுகள் போன்று இருக்கும் இந்த கதவுகளை அவ்வளவு எளிதாக இடித்து உடைத்து விட முடியாது.

*ஸ்டீல் கதவின் உட்புறம் பத்து எம்எம் ஸ்டீல் மெஷ் அதற்குமேல் பாலித்தீன் ஃபோம்கொடுக்கப்பட்டு அதற்குமேல் ஸ்டீல் ஷீட் கொடுக்கப்பட்டு அதற்கும் வெளிப்புறம் மரம் போன்ற தோற்றத்தை கொடுப்பதற்காக ஸ்டீல் ஷீட்டுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.அதேபோல் கீழே வாசப்படியானது முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்டுள்ளது.இதனால் வாசற்படியில் தண்ணீர் பட்டால் கூட அது துருப்பிடித்து விடும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை.

*இதன் உறுதித்தன்மை காரணமாக வீட்டின் நுழைவு வாயில் கதவு, பின்பக்க கதவு, பால்கனி கதவு மற்றும் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. மற்ற அறைகளுக்கு போடக்கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கதவுகளும் கிடைக்கின்றன.

இதுபோன்ற கதவுகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாகவும் வடிவமைத்துத் தருகிறார்கள்.

* இந்தக் கதவுகள் ஆயத்த கதவுகளாக இருப்பதால் இவற்றை பொருத்துவதற்கு குறைவான நேரமே தேவைப்படும்.

*இந்த கதவுகளை லேட்ச்சின் மூலம் பூட்டும் பொழுது அவை பன்னிரெண்டு இடங்களில் பூட்டப்பட்டு அதிக பாதுகாப்பை தருகின்றது.இதனால் கடப்பாரை கொண்டு இடித்தால் கூட கதவில் சிறிய அளவில் பள்ளம் தோன்றுமே தவிர அதை உடைத்து விட முடியாது.இதனால் திருட்டு பயம் என்பதே இருக்காது.

*இந்த கதவுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. கதவுகளுக்கு முன்புறம் சாதாரணமாகவே பாதுகாப்பிற்காக இரும்பு கிரில் கதவுகள் போடப்பட்டு இருப்பதைப் பார்க்க முடியும். அதேபோல் இந்த ஸ்டீல் கதவுகளிலும் கூடுதல் பாதுகாப்பிற்காக இரண்டு கதவுகளை போட்டுக்கொள்ளலாம். அதாவது வெளிப்புறம் இருக்கும் கதவில் ஸ்டீல் கம்பிகள் பொருத்தப்பட்டு காற்று வந்து போகுமாறு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிப்புற கதவுகளை மூடி வைத்து உள்ளிருக்கும் கதவை திறந்து வைத்தோம் என்றால் காற்று நன்றாக வீட்டுக்குள் வருவதோடு குழந்தைகள் வெளியே செல்லாதவாறு பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் உள்ளிருந்து வெளியில் நடப்பதை பார்க்கவும் முடியும்.

*மற்ற கதவுகளை போலவே இந்த ஸ்டீல் கதவுகளிலும் கண்ணாடிகள் பொருத்தி அதில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கண்ணாடிகள் மிகவும் உறுதியான கண்ணாடிகளாக இருப்பதால் இவற்றையும் எளிதில் உடைத்து விட முடியாது.

*வீட்டின் வெளிப்புறக் கதவை திறக்காமலேயே உள்ளிருந்தே வெளியில் வந்திருப்பவரை பார்ப்பதற்காக கதவில் பொருத்தப்பட்டிருக்கும் லென்ஸ்கள் வலது புறமிருந்து இடது புறமும்,இடது புறமிருந்து வலது புறமும் மற்றும் நேராகவும் அகன்று காண்பிக்கும் விதத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

*கதவின் ஃபிரேமிலேயே அழைப்பு மணிக்கான சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரிகள் மூலம் அழைப்பு மணி இயங்குகின்றது.

*பெரிய கதவுகள் தேவை என்று கூறுபவர்களுக்கு இரட்டை கதவுகள் இருப்பது போன்றும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.இதில் பெரிய கதவு போல் இருப்பதை எப்பொழுதும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் விசேஷம் மற்றும் ஏதாவது பெரிய பொருளை வீட்டிற்குள் எடுத்து செல்ல வேண்டும் என்பது போன்ற சமயங்களில் இந்தப் பெரிய கதவுடன் அந்த சிறிய கதவையும் திறந்து வழி ஏற்படுத்திக் கொள்ளலாம்..

*இந்த கதவுகளுக்கு ஏழு சாவிகள் கொடுக்கப்படுகின்றன. அதில் இரண்டு சாவிகள் வீட்டு வேலை நடைபெறும்போது அங்கு வேலை செய்பவர்கள் உபயோகிப்பதற்காக கொடுக்கப்படுகின்றன.. அவர்கள் உபயோகித்த பிறகு நம்முடைய சாவிகளிலேயே பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட சாவியை நம்முடைய கதவில் கொடுக்கப்பட்டிருக்கும் பூட்டில் முன்னும் பின்னும் சுழற்றி உபயோகித்தோம் என்றால் அதன் பிறகு முன்பு உபயோகித்த அந்த இரண்டு சாவிகளையும் உபயோகப்படுத்த முடியாது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற ஐந்து சாவிகளையும் தைரியமாக உபயோகப்படுத்தலாம்.பிளாஸ்டிக் சாவியை உபயோகப்படுத்தாமல் கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு சாவிகளையும் உபயோகப்படுத்துவது என்றாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

*வெளிப்புறமாக திறந்து மூடக்கூடிய வகையிலும் இந்த கதவுகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு. சில வீடுகளில் கதவுகளை உட்புறம் திறப்பதற்கு முடியாதவாறு படிக்கட்டுகள் அல்லது வேறு ஏதாவது தடங்கல்கள் இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற கதவுகள் உபயோகமாக இருக்கும்.

*மெயின்கதவிலேயே மற்றொரு சிறிய கதவு பொருத்தப்பட்டு வரும் இன்டர்ணல் கதவுகளும் இந்த ஸ்டீல் கதவுகளில் வருகின்றன. வெளியில் யாராவது வரும்பொழுது மெயின் கதவை திறக்காமல் இந்த இன்டர்ணல் கதவை மட்டும் திறந்து வந்திருப்பவர்களைப் பார்த்துப் பேச முடியும்.

*ஃபிரேம்களிலும் டெக்கரேட்டிவ் மற்றும் நான் டெக்கரேட்டிவ் என இரண்டு வகைகள் உள்ளன.

* துரு பிடிப்பது, பூஞ்சை பிடிப்பது, மழைக்காலங்களில் கதவு உப்பிக் கொள்வது மற்றும் கரையான் அரிப்பு என எந்த பிரச்சனையும் இந்த கதவுகளுக்கு ஏற்படாது.சாதாரண கதவுகளை விட அதிக பாதுகாப்பு கொடுக்கக் கூடியவை இவ்வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கதவுகள்.

மேலும் செய்திகள்