பயிற்சி கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதம் அடித்து அசத்தல் ஆஸ்திரேலியா–இந்தியா ‘ஏ’ ஆட்டம் டிரா

பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த இந்திய ‘ஏ’ அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதம் விளாசினார். ஆட்டமும் டிராவில் முடிந்தது.

Update: 2017-02-19 19:30 GMT

மும்பை,

பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த இந்திய ‘ஏ’ அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதம் விளாசினார். ஆட்டமும் டிராவில் முடிந்தது.

பயிற்சி ஆட்டம்

ஆஸ்திரேலியா – இந்தியா ‘ஏ’ அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் கடந்த 17–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய ‘ஏ’ அணி 2–வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் (85 ரன்), ரிஷாப் பான்ட் (3 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடங்கிய 10–வது நிமிடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது 9–வது முதல்தர போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்தில் ரிஷாப் பான்டும் (21 ரன்), அடுத்து வந்த இ‌ஷன் கிஷானும் ஆட்டம் இழந்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை செஞ்சுரி

இதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யருடன், கிருஷ்ணப்பா கவுதம் கைகோர்த்தார். இருவரும் மளமளவென ரன்களை திரட்டினர். குறிப்பாக சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கி, சிக்சர் மழை பொழிந்தனர். அணியின் ஸ்கோர் 372 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. கிருஷ்ணப்பா கவுதம் 74 ரன்களில் (68 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். இவர்கள் 7–வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேகரித்தனர்.

இதன் பின்னர் ‌ஷபாஸ் நதீம் (0), அசோக் திண்டா (2 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினாலும், கடைசி விக்கெட்டுக்கு ஆட வந்த நவ்தீப் சைனி (4 ரன்) துணையுடன் ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதத்தை கடந்தார்.

முடிவில் இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 91.5 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. மும்பையைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் 202 ரன்களுடன் (210 பந்து, 27 பவுண்டரி, 7 சிக்சர்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக வர்ணிக்கப்படும் நாதன் லயன் 4 விக்கெட்டுகளும், ஸ்டீவ் ஓ கீபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் என்றாலும் களத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லயன் 28.5 ஓவர்களில் 162 ரன்களும் (ரன்ரேட் 5.61), ஸ்டீவ் ஓ கீபே 24 ஓவர்களில் 101 ரன்களும் (ரன்ரேட் 4.20) வாரி வழங்கினர். இது நிச்சயம் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

டிரா ஆனது

அடுத்து 66 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 36 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. ரென்ஷா 10 ரன்களும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னும், டேவிட் வார்னர் 35 ரன்களும், ஹேன்ட்ஸ்கோம்ப் 37 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டீவ் ஓ கீபே (19 ரன்), மேத்யூ வேட் (6 ரன்) களத்தில் நின்றனர்.

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் வருகிற 23–ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்