ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட்: மார்ஷ் சகோதரர்களின் அபார சதத்தால் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி

இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் கடைசி டெஸ்டில் மார்ஷ் சகோதரர்களின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

Update: 2018-01-07 21:45 GMT

சிட்னி,

இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் கடைசி டெஸ்டில் மார்ஷ் சகோதரர்களின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

ஆ‌ஷஸ் டெஸ்ட்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 346 ரன்களில் ஆல்–அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3–வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 479 ரன்கள் எடுத்திருந்தது. சகோதரர்கள் ஷான் மார்ஷ் (98 ரன்), மிட்செல் மார்ஷ் (63 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது. ஷான் மார்ஷ் முதல் ஓவரிலேயே பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 6–வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் துரிதமான ரன்சேகரிப்பில் கவனம் செலுத்திய அவருடைய தம்பி மிட்செல் மார்ஷ் 2–வது சதத்தை எட்டினார்.

அணி வலுவான நிலையை அடைய வழிவகுத்த இந்த ஜோடி ஸ்கோர் 544 ரன்களை எட்டிய போது பிரிந்தது. 26 வயதான மிட்செல் மார்ஷ் 101 ரன்களிலும் (141 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் மார்ஷ் 156 ரன்களிலும் (291 பந்து, 18 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் 11 ரன்களில் கேட்ச் ஆனார்.

ஆஸ்திரேலியா 649 ரன்கள்

தேனீர் இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 193 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், கம்மின்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, மறுபடியும் தகிடுதத்தம் போட்டது. ஸ்டோன்மான் (0), அலஸ்டயர் குக் (10 ரன்), ஜேம்ஸ் வின்ஸ் (18 ரன்), டேவிட் மலான் (5 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் தோல்வியின் பாதையில் பரிதவித்தது. கேப்டன் ஜோ ரூட் (42 ரன்), விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (17 ரன்) களத்தில் நிற்கிறார்கள். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 2 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தோல்வியின் பிடியில் இங்கிலாந்து

5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 210 ரன்கள் எடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வாகை சூடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. முதல் 4 டெஸ்டுகளில் 3–ல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஏற்கனவே கோப்பையை வசப்படுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

4–வது நாள் ஆட்டத்திற்கு பிறகு 34 வயதான ஷான் மார்ஷ் நிருபர்களிடம் கூறுகையில் ‘சதங்களை எட்டிய போது இருவரும் உணர்வுகளை பகிர்ந்து கொண்டோம். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது. எனது குடும்பத்துக்கு இது பெருமைமிக்க தருணம். ஏற்கனவே எனது தந்தை ஜெப் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக 50 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்’ என்றார்.

மேலும் ஷான் மார்ஷ் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கடைசி நாள் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்று நினைக்கிறேன். ஆடுகளம் அவரது பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கிறது. தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை சாய்ப்பார் என்று நம்புகிறோம்’ என்றார்.

சாதனை துளிகள்

*ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே இன்னிங்சில் சதம் விளாசிய 3–வது சகோதரர்கள் என்ற பெருமையை ஷான் மார்ஷ்– மிட்செல் மார்ஷ் பெற்றனர். ஏற்கனவே கிரேக் சேப்பல்–இயான் சேப்பல் (3 முறை) மார்க் வாக்– ஸ்டீவ் வாக் (2 முறை) ஆகிய ஆஸ்திரேலிய சகோதரர்கள் இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார்கள்.

*இங்கிலாந்து அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மாசன் கிரேன் 48 ஓவர்களில் 193 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இங்கிலாந்தின் அறிமுக பவுலர் இவர் தான். இதற்கு முன்பு டேவோன் மால்கம் 1989–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 166 ரன்களை வழங்கியதே இங்கிலாந்து புதுமுக பவுலரின் மோசமான பந்து வீச்சாக இருந்தது.

*இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 10 ரன்னில், நாதன் லயனின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். முன்னதாக குக் 5 ரன் எடுத்த போது டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 6–வது பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றார். 33 வயதான குக் இதுவரை 152 டெஸ்டுகளில் விளையாடி 32 சதங்கள் உள்பட 12,005 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் முதல் 5 இடங்களில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (15,921 ரன்), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (13,378 ரன்), தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் (13,289 ரன்), இந்தியாவின் ராகுல் டிராவிட் (13,288 ரன்), இலங்கையின் சங்கக்கரா (12,400 ரன்) ஆகியோர் உள்ளனர்.

*ஆஸ்திரேலிய அணியில் 3–வது வரிசையில் இருந்து 6–வது வரிசை பேட்ஸ்மேன்கள் (கவாஜா–171 ரன், ஸ்டீவன் சுமித்–83 ரன், ஷான் மார்ஷ்–156 ரன், மிட்செல் மார்ஷ்–101 ரன்) வரை அனைவரும் 75 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது இது 3–வது முறையாகும். இதற்கு முன்பு பிராட்மேனின் கேப்டன்ஷிப்பில் 1937 மற்றும் 1946–ம் ஆண்டுகளில் இந்த வரிசையில் ரன்வேட்டை நடத்தியிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்