இலங்கை–வங்காளதேச அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

இலங்கை–வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

Update: 2018-02-04 21:00 GMT
சிட்டகாங்,

இலங்கை–வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இரு இன்னிங்சிலும் மொமினுல் ஹக் சதம் அடித்து சாதனை படைத்தார்.

முதலாவது டெஸ்ட்


இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 513 ரன்கள் குவித்து ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 176 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 199.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 713 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 200 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 18 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

டிராவில் முடிந்தது

நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 4–வது விக்கெட்டுக்கு லிட்டான் தாஸ், மொமினுல் ஹக்குடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தோல்வியில் இருந்து தப்ப வழிவகுத்தது. அணியின் ஸ்கோர் 261 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 6–வது சதம் கண்ட மொமினுல் ஹக் 174 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சில் அவுட் ஆனார். 4–வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக், லிட்டான் தாஸ் ஜோடி 180 ரன்கள் திரட்டியது. அடுத்து லிட்டான் தாஸ் 94 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

வங்காளதேச அணி 2–வது இன்னிங்சில் 100 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கேப்டன் மக்முதுல்லா 28 ரன்னுடனும், மொசாடெக் ஹூசைன் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் ஹெராத் 2 விக்கெட்டும், தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவன் பெரேரா, சன்டகன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

மொமினுல் ஹக் சாதனை

முதல் இன்னிங்சில் 176 ரன்னும், 2–வது இன்னிங்சில் 105 ரன்னும் எடுத்த வங்காளதேச அணி வீரர் மொமினுல் ஹக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் என்ற சிறப்பை மொமினுல் ஹக் பெற்றார்.

இரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் வருகிற 8–ந் தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்