களத்தில் ஸ்டீவன் சுமித்தை இடித்த ரபடாவுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு

களத்தில் ஸ்டீவன் சுமித்தை இடித்த ரபடாவுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Update: 2018-03-10 22:45 GMT

இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (25 ரன்), வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். விக்கெட்டை வீழ்த்தியதும் மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக கத்திய ரபடா, அப்பீல் செய்யலாமா என்று யோசித்தபடி நடந்து வந்த சுமித் மீது அவரது தோள்பட்டையில் இடித்தார்.

இது நடத்தை விதிமீறல் என்பதால் அவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) லெவல்2 பிரிவின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறது. இது குறித்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்த இருக்கிறார். வேண்டுமென்றே எதிரணி வீரர் மீது உடல்ரீதியாக உரசினார் என்று உறுதி செய்யப்பட்டால் ரபடா தடை நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ரபடா ஒழுங்கீன செயலுக்காக இதுவரை 5 தகுதி இழப்பு புள்ளி பெற்று இருக்கிறார். மேலும் 3 தகுதி இழப்பு புள்ளியை அவர் பெறும் பட்சத்தில் 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் 22 வயதான ரபடாவினால் விளையாட முடியாது.

மேலும் செய்திகள்