டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா போராடி வருகிறது.

Update: 2018-03-11 23:15 GMT
போர்ட்எலிசபெத்,

போர்ட்எலிசபெத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் டிவில்லியர்சின் சதத்தின் உதவியுடன் தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவித்தது. 2-வது இன்னிங்சில் சிறந்த நிலையை எட்டுவதற்கு ஆஸ்திரேலியா போராடிக்கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் (74 ரன்), வெரோன் பிலாண்டர் (14 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டிவில்லியர்ஸ் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிலாண்டர் தனது பங்குக்கு 36 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய கேஷவ் மகராஜூன் ஒத்துழைப்புடன் டிவில்லியர்ஸ் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

கேஷவ் மகராஜ் 30 ரன்களும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), நிகிடி 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். உணவு இடைவேளைக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 118.4 ஓவர்களில் 382 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டிவில்லியர்ஸ் 126 ரன்களுடன் (146 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (13 ரன்), காஜிசோ ரபடாவின் புயல்வேக தாக்குதலில் கிளன் போல்டு ஆனார். கேமரூன் பான்கிராப்ட் (24 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (11 ரன்), ஷான் மார்ஷ் (1 ரன்) ஆகியோரும் சீக்கிரமாகவே நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 86 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதையடுத்து உஸ்மான் கவாஜாவும், மிட்செல் மார்சும் கைகோர்த்து போராடினர். இவர்கள் அணியின் சரிவை தடுத்து நிறுத்தியதுடன், முன்னிலை பெறவும் வைத்தனர். ஸ்கோர் 173 ரன்களை எட்டிய போது, உஸ்மான் கவாஜா (75 ரன், 136 பந்து, 14 பவுண்டரி) ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி கவாஜா அப்பீல் செய்து பார்த்தும் பிரயோஜனம் இல்லை. 3-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் மார்ஷ் 39 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி இதுவரை 41 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போதைய சூழலில் தென்ஆப்பிரிக்காவின் கையே சற்று ஓங்கி இருக்கிறது. இந்த டெஸ்ட் 4-வது நாளான இன்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.

டிவில்லியர்ஸ் சாதனை

126 ரன்கள் சேர்த்த டிவில்லியர்சுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்த 6-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் நொறுக்கிய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு கிரேமி பொல்லாக், எட்டி பார்லோ, காலிஸ், அம்லா ஆகியோர் தலா 5 சதங்கள் அடித்திருந்தனர்.

மேலும் செய்திகள்