இரானி கோப்பை கிரிக்கெட்: வாசிம் ஜாபர் 285 ரன்கள் குவித்து சாதனை

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் ஆட்டம் இழக்காமல் 285 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

Update: 2018-03-15 22:00 GMT
நாக்பூர்,

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் ஆட்டம் இழக்காமல் 285 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

இரானி கோப்பை கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. வாசிம் ஜாபர் 113 ரன்களுடனும், கணேஷ் சதீஷ் 29 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் விதர்பா பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. வாசிம் ஜாபரும், கணேஷ் சதீசும் நிலைத்து நின்று ஆடினார்கள். ஜாபர் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 507 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 280 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் எடுத்த கணேஷ் சதீஷ், சித்தார்த் கவுல் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

ஜாபர் சாதனை

அடுத்து அபூர்வ் வான்கடே, வாசிம் ஜாபருடன் கைகோர்த்து, மேலும் வலுவூட்டினார். ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் குவித்துள்ளது. வாசிம் ஜாபர் 285 ரன்னுடனும் (425 பந்து, 34 பவுண்டரி, ஒரு சிக்சர்), அபூர்வ் வான்கடே 44 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் ஆட்டம் நடக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் 285 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். வாசிம் ஜாபர் 176 ரன்களை எட்டிய போது முதல் தர போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 40 வயதான வாசிம் ஜாபர் அதிக வயதில் முதல்தர போட்டியில் 250 ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் இந்தியர் மற்றும் முதலாவது ஆசிய வீரர் ஆகிய மகத்தான சிறப்புகளையும் தனதாக்கினார்.

ஹர்பஜன், கங்குலி பாராட்டு

2012-13-ம் ஆண்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக ஆடிய முரளி விஜய் 266 ரன்கள் குவித்ததே இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையையும் ஜாபர் தகர்த்தார்.

சாதனை படைத்த வாசிம் ஜாபரை, ஹர்பஜன்சிங் உள்பட பலர் டுவிட்டர் மூலம் வாழ்த்தி உள்ளனர். ‘இன்னும் வலுவாக சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவுக்காக கூடுதலாக சிறிது காலம் ஆடியிருக்க வேண்டும்’ என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். ‘இன்னும் இந்த மூத்த வீரர் பிரமிக்க வைக்கிறார்’ என்று கங்குலி புகழ்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்