பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது.

Update: 2018-03-29 20:45 GMT

மும்பை,

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்களில் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் 107 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டேனிலே 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டும், ராதா யாதவ், தீப்தி ‌ஷர்மா, பூணம் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி கண்டது. மிதாலி ராஜ் 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மந்தனா 62 ரன்னும் (41 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மேலும் செய்திகள்