ஐதராபாத் அணியின் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி: கெய்லின் அபார சதத்தால் பஞ்சாப் வெற்றி

கெய்லின் அபார சதத்தால் பஞ்சாப் வெற்றி பெற்றது.

Update: 2018-04-19 23:15 GMT
மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கெய்லின் அபார சதத்தால் பஞ்சாப் அணி 3-வது வெற்றியை ருசித்தது.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். நடப்பு தொடரில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த முதல் கேப்டன் அஸ்வின் தான்.

இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இவர்கள் போக போக ரன்வேட்டை நடத்தினர். ரஷித்கானின் சுழற்பந்து வீச்சில் கெய்ல் 2 சிக்சர் தூக்கினார். ஸ்கோர் 53 ரன்களை எட்டிய போது லோகேஷ் ராகுல் (18 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த மயங்க் அகர்வாலும் 18 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் கெய்லுடன், கருண் நாயர் கைகோர்த்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 14-வது ஓவரை வீசிய ரஷித்கானின் பந்து வீச்சில் தொடர்ந்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு கெய்ல் ருத்ரதாண்டவமாடினார். ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பாத நிலையிலும் கெய்ல் தனக்கே உரிய பாணியில் நாலாபுறமும் பந்துகளை தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் ஐதராபாத் பவுலர்கள் மிரண்டு போனார்கள். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்த கருண் நாயர் தனது பங்குக்கு 31 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய கெய்ல் 58 பந்துகளில் தனது 6-வது ஐ.பி.எல். சதத்தை நிறைவு செய்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத்துக்கு எதிராக 150 ரன்களை கடந்த முதல் அணி பஞ்சாப் தான். கிறிஸ் கெய்ல் 104 ரன்களுடனும் (63 பந்து, ஒரு பவுண்டரி, 11 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 14 ரன்களுடனும் (6 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ‘நம்பர் ஒன்’ பவுலரான ரஷித்கான் 4 ஓவர்களில் 55 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். அவரது மோசமான பந்து வீச்சு இதுவாகும்.

அடுத்து களம் புகுந்த ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 15 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 57 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 54 ரன்களும் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ரன் கணக்கை தொடங்கும் முன்பே முதல் ஓவரிலேயே பந்து தாக்கி முழங்கையில் காயமடைந்து ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறியது ஐதராபாத் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அத்துடன் தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஐதராபாத்தின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்