ஐபிஎல் போட்டிகள் நிதியளவில் எனக்கு பெரிய அளவில் உதவுகிறது ; மனம் திறந்த டிவில்லியர்ஸ்

ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது ஏன் என தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார். #IPL2018

Update: 2018-04-28 10:13 GMT
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அவரது அதிரடியான பேட்டிங், களத்தில் ஒழுக்கம், அணுகுமுறை ஆகியவற்றால் தென்னாப்பிரிக்காவை கடந்து சர்வதேச அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார். பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி மிரட்டினார். தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னால் இருக்கும் அம்பாதி ராயுடு, இவரை விட 3 ரன்கள் மட்டுமே அதிகம். 6 போட்டிகளில் ஆடியுள்ள ராயுடு 283 ரன்களும் 6 போட்டிகளில் ஆடியுள்ள டிவில்லியர்ஸ் 280 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ஜொலித்துவரும் டிவில்லியர்ஸ், இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளார். ஐபிஎல்லில் விளையாடுவது தொடர்பாக பேசிய டிவில்லியர்ஸ், ஐபிஎல் ஆட வந்த போது எனக்கு வசைதான் விழுந்தது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை என்னால் தவறவிட முடியாது. இந்த விஷயத்தில் நான் பொய் சொல்ல முடியாது. நிதியளவில் எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரிய அளவில் இது உதவுகிறது. 7 வாரங்கள் வெளியே இருப்பது கடினம்தான் ஆனாலும் தவிர்க்க முடியாது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு தேவையிருக்காது. ஆனால் மற்றவர்களுக்கு ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு, நிதியளவில் மிக முக்கியமானது என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகளில் பணத்திற்காகத்தான் விளையாடுகிறேன் என டிவில்லியர்ஸ் ஒளிவுமறைவில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்