கிரிக்கெட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வந்த மைக் ஹெஸ்சன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென நேற்று அறிவித்தார்.
வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வந்த மைக் ஹெஸ்சன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென நேற்று அறிவித்தார். 43 வயதான அவர் அடுத்த மாதம் (ஜூலை) 31–ந் தேதியுடன் பணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மைக் ஹெஸ்சன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.இது தொடர்பாக மைக் ஹெஸ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பயிற்சியாளர் பதவியில் 100 சதவீத அர்ப்பணிப்புடன் முழு நேரத்தையும் செலவிட வேண்டியது அவசியமானதாகும். எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதால் அடுத்த 12 மாதத்துக்கு பயிற்சியாளர் பதவியில் இருக்க நான் விரும்பவில்லை. அடுத்த 12 மாதத்துக்கு அணிக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும். அதற்கு நான் தகுதியானவர் இல்லை என்று கருதுவதால் விலகல் முடிவை எடுத்தேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் விலகல் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி டேவிட் ஒயிட்டிடம் கருத்து கேட்ட போது, ‘அடுத்த 12 மாதத்துக்கு பயிற்சியாளர் பதவியில் தொடருமாறு விடுத்த வேண்டுகோளை மைக் ஹெஸ்சன் ஏற்க மறுத்து விட்டார். எனவே புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான பணிகள் விரைவில் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்து வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் போட்டி தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறது. மைக் ஹெஸ்சன் பயிற்சியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் 20 ஓவர் போட்டி தரவரிசையில் அந்த அணி நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.