கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்; சிறப்பு ஜெர்ஸியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் - காரணம் என்ன...?

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-10 05:12 GMT

image courtesy: @ShubmanGill / @gujarat_titans

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும்.

அதேவேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்த சென்னை அணி முயற்சிக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் குஜராத் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 13ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிரத்யேக ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நீல இளஞ்சிவப்பு (லாவெண்டர்) நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்