ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Update: 2018-11-05 22:30 GMT
சியல்ஹெட்,

ஜிம்பாப்வே-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 51 ஓவர்களில் 143 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்து இருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 65.4 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மசகட்ஜா 48 ரன்கள் சேர்த்தார். வங்காளதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டும், மெஹிதி ஹசன் மிராஜ் 3 விக்கெட்டும், நஜ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. லிட்டான் தாஸ் 14 ரன்னுடனும், இம்ருல் கெய்ஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்