இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து அணி 321 ரன் குவிப்பு

இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது.

Update: 2018-11-06 23:15 GMT
காலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனை அடுத்து இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராய் போர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய மொயின் அலி ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதும், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரை சதத்தை கடந்தார்.

முன்னதாக இலங்கை சூழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து கேப்டன் ஜொ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் காலே மைதானத்தில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக முரளிதரன் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரங்கனா ஹெராத்திற்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஜெனிங்ஸ்( 46 ரன்), சாம் குர்ரன்(48 ரன்), ஜொஸ் பட்லர்(38 ரன்) ஆகியோரின் உதவியுடன் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் குவித்தது.

விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 84 ரன்னுடனும், ஜாக் லீச் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் தில்ருவான் பரேரா 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்