தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணி 189 ரன்னில் சுருண்டது

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான (‘பி’ பிரிவு) லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-11-29 22:00 GMT
சென்னை, 

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான (‘பி’ பிரிவு) லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாபா அபராஜித் சதம் (103 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 63.5 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ராமனை (98 ரன்) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் மனோஜ் திவாரி ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளும், முகமது 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி நேற்றைய முடிவில் அபினவ் முகுந்தின் (2 ரன்) விக்கெட்டை இழந்து 12 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லியில் நடந்து வரும் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. யுவராஜ்சிங் 24 ரன்னில் கேட்ச் ஆனார். 175 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 106 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்