நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தோல்வி பாதையில் இலங்கை அணி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Update: 2018-12-29 22:15 GMT
கிறைஸ்ட்சர்ச்,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 178 ரன்களும், இலங்கை 104 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 660 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மலைப்பான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் தோல்வியை தவிர்க்க போராடினர். கேப்டன் தினேஷ் சன்டிமால் (56 ரன்), குசல் மென்டிஸ் (67 ரன்) அரைசதம் அடித்த திருப்தியோடு பெவிலியன் திரும்பினர். முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (22 ரன்) தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார். ரோஷன் சில்வா (18 ரன்), டிக்வெல்லா (19 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 104 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. தில்ருவான் பெரேரா (22 ரன்), லக்மல் (16 ரன்) களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

கைவசம் 4 விக்கெட் மட்டுமே வைத்துள்ள இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 429 ரன்கள் தேவைப்படுகிறது. கடைசி நாளில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இந்த டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவசியமான சூழல் உருவானால் மேத்யூஸ் பேட் செய்ய வருவார்.

இதற்கிடையே இலங்கை வீரர் குசல் மென்டிஸ் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு (1,322 ரன், 13 டெஸ்ட்) அடுத்து ஆயிரம் ரன்களை (12 டெஸ்டில் 1,023 ரன்) கடந்துள்ளார். 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சிறப்பை 23 வயதான குசல் மென்டிஸ் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்