இலங்கைக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி திசரா பெரேரா 57 பந்தில் சதம் அடித்தும் பலன் இல்லை

இலங்கை–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் (90 ரன்), காலின் முன்ரோ (87 ரன்), ஜேம்ஸ் நீ‌ஷம் (64 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா (71 ரன்) தவிர மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

Update: 2019-01-05 22:00 GMT

மவுன்ட் மாங்கானு,

இலங்கை–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் (90 ரன்), காலின் முன்ரோ (87 ரன்), ஜேம்ஸ் நீ‌ஷம் (64 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா (71 ரன்) தவிர மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களுடன் இலங்கை தத்தளித்த நிலையில், 6–வது விக்கெட்டுக்கு இறங்கிய திசரா பெரேரா விசுவரூபம் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்த அவர் 57 பந்துகளில் சதத்தை எட்டி, நியூசிலாந்துக்கு எதிராக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் அவரது கன்னி சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. திசரா பெரேரா 74 பந்துகளில் 8 பவுண்டரி, 13 சிக்சருடன் 140 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13 சிக்சர்கள் நொறுக்கிய திசரா பெரேரா, ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் 6–வது இடத்தை பிடித்தார். அதே சமயம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 1996–ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யா 11 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 8–ந் தேதி நெல்சனில் நடக்கிறது.

மேலும் செய்திகள்