ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 144 ரன்னில் ஆல்-அவுட்

பிரிஸ்பேனில் தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இலங்கை அணி 144 ரன்னில் சுருண்டது.

Update: 2019-01-24 22:45 GMT
பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் குர்டிஸ் பேட்டர்சன், ஜெயே ரிச்சர்ட்சன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.

இலங்கை அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்பில் உள்ள இலங்கை அணி ‘டாஸ்’ ஜெயித்ததும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பவுலர்கள் நன்கு ‘ஸ்விங்’ செய்து இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா (64 ரன், 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் சன்டிமால் 5 ரன்னில் வீழ்ந்தார்.

முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 56.4 ஓவர்களில் 144 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த விக்கெட்டையும் சேர்த்து ஸ்டார்க்கின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 17-வது ஆஸ்திரேலிய நாட்டவர் ஸ்டார்க் ஆவார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ பர்ன்ஸ் 15 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்கஸ் ஹாரிஸ் 40 ரன்னுடனும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இன்னும் 72 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் தொடர்ந்து விளையாடும்.

மேலும் செய்திகள்