ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்கு - ‘பவுன்சர்’ பந்து தாக்கி மேலும் ஒரு வீரருக்கு பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-03 23:07 GMT
கான்பெர்ரா,

கான்பெர்ராவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வீரர் குசல் பெரேரா, வேகப்பந்து வீச்சாளர் ஜெயே ரிச்சர்ட்சன் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் காயம் அடைந்தார். எகிறி வந்த அந்த பந்து அவரது ஹெல்மெட்டின் பக்கவாட்டில் வேகமாக தாக்கியது. இதனால் அதிர்வுக்குள்ளான குசல் பெரேரா சிகிச்சை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஆடினார். ஆனாலும் சற்றே தள்ளாடினார். இதனால் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய குசல் பெரேரா (29 ரன்), பரிசோதனை மேற்கொள்வதற்காக பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு அவர் திரும்பவில்லை. அதே சமயம் முந்தைய நாள் ‘பவுன்சர்’ பந்து தாக்கி வெளியேறிய கருணாரத்னே நேற்று மீண்டும் பேட்டிங் செய்து 59 ரன்களில் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து 319 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. தனது 8-வது சதத்தை எட்டிய உஸ்மான் கவாஜா 101 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 516 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். குசல் பெரேரா 2-வது இன்னிங்சில் ஆடுவார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்