இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

Update: 2019-03-20 22:30 GMT
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக காமிந்து மென்டிஸ் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் பெலக்வாயோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டையில்’ (சமன்) முடிந்தது. கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 4 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 41 ரன்னும், வான்டெர் துஸ்சென் 34 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இரு அணிகளும் சம ரன்கள் எடுத்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் டேவிட் மில்லர் (5 பந்துகளில் 13 ரன்), வான்டெர் துஸ்சென் ஆகியோர் மலிங்காவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு 14 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி வீரர்கள் திசரா பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் இம்ரான் தாஹிரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதுடன் 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் தென்ஆப்பிரிக்க அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்