வெற்றியுடன் விடைபெறுவாரா வார்னர்? ஐதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று மோதல்

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோத உள்ளன.

Update: 2019-04-28 23:41 GMT
ஐதராபாத்,

இவ்விரு அணிகளும் தலா 5 வெற்றி, 6 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா–சாவா? மோதல் தான். அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் (ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 611 ரன்) இந்த ஆட்டத்துடன் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்காக தாயகம் (ஆஸ்திரேலியாவுக்கு) திரும்பி விடுவார். அதனால் தனது ஐ.பி.எல். பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் உள்ளார். ஐதராபாத் அணிக்கு உள்ளூரில் நடக்கும் கடைசி லீக் இதுவாகும். இந்த ஸ்டேடியத்தில் 6 ஆட்டங்களில் 4–ல் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணிக்கு சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது கூடுதல் உத்வேகம் அளிக்கும். ஏற்கனவே பஞ்சாப்புக்கு எதிராக அவர்களது இடத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி அதற்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை கிறிஸ் கெய்ல் (444 ரன்), லோகேஷ் ராகுல் (441 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் சீராக இல்லை. அது தான் அந்த அணியின் பலவீனமாக மாறி விட்டது. சுழற்பந்து வீச்சில் கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் கட்டுக்கோப்பாக வீசுகிறார்கள். கடந்த 2 ஆட்டங்களில் போராடி தோற்ற பஞ்சாப் அணி, வெற்றிப்பாதைக்கு திரும்ப எல்லா வகையிலும் கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் செய்திகள்