நீண்ட காலத்திற்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடியதால் பதற்றமடைந்தேன் வார்னர் சொல்கிறார்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் பிரிஸ்டலில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது.

Update: 2019-06-02 22:30 GMT

பிரிஸ்டல்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் பிரிஸ்டலில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது. இதில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (66 ரன்), டேவிட் வார்னர் (89 ரன், 114 பந்து, 8 பவுண்டரி) அரைசதம் அடித்தனர். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் ஓராண்டு தடையை அனுபவித்த வார்னர் அதன் பிறகு களம் கண்ட முதல் சர்வதேச போட்டி இது தான்.

கடைசி வரை களத்தில் நின்று ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சி முகாமுக்கு திரும்பிய போதும், இன்று களம் இறங்கிய போதும் பதற்றத்தில் உணர்ச்சி வசப்பட்டேன். களத்தில் என்னை நிலைநிறுத்தி, இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு கூடுதலான பந்துகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக ஆடியதால் எனக்குள் இருந்த நெருக்கடி தணிந்தது. கடந்த ஓராண்டு காலமாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே ஆடியதும் நான் நிதானமாக தொடங்கியதற்கு ஒரு காரணம். இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கி இருப்பது சிறப்பான வி‌ஷயம். அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவோம். கடந்த உலக கோப்பையுடன் ஒப்பிடும் போது இது வித்தியாசமான அணி. ஆனால் ஆற்றல் மிகுந்த அணி’ என்றார்.

மேலும் செய்திகள்